

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் குழந்தைகள் பாராளுமன்றம் சார்பில் மாணவர்களே இணைந்து நூலகம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள நாகதாசம்பட்டியில் குழந்தைகள் பாராளுமன்றம் சார்பில் சமீபத்தில் நூலகம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. ‘சமத்துவ மதிநுட்ப சாலை’ என்று நூலகத்தின் பெயரே வழக்கத்திற்கு மாறுபட்டதாக ஈர்க்கும் வகையில் உள்ளது. நாகதாசம்பட்டியைச் சேர்ந்த தனபால்-வீரம்மாள் தம்பதியின் முதல் மகன் ஞானசேகர் (16). தற்போது பிளஸ் 1 முடித்து கோடை விடுமுறையில் உள்ளார்.
இந்த மாணவர் தான் தற்போது நாகதாசம்பட்டியில் நூலகம் உருவாக காரணம். ஏற்கெனவே, நாகதாசம்பட்டியில் செயல்பட்டு வந்த கிராமப்புற நூலகம் பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கிறது. இந்நிலையில், மாணவர் ஞானசேகர் தன் நட்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 20 பேரை இணைத்துக் கொண்டு புதிய நூலகத்தை தொடங்கியுள்ளார்.
மாணவர் ஞானசேகர் 5-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பில் செயல்பட்டு வருகிறார். மாவட்ட, மாநில அளவிலான பொறுப்புகளை கடந்து தற்போது தேசிய அளவில் குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பின் துணைப் பிரதமர் பொறுப்பில் உள்ளார்.
இந்த மாணவர் தலைமை யிலான குழுவினர் ஏற்கெனவே, ‘சக்கை’ என்ற பெயரில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து இயக்கிய குறும்படம் பெருமளவில் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலகம் குறித்து மாணவர் ஞானசேகர் கூறியது :
எங்கள் பகுதியில் இருந்த கிளை நூலகம் சில காரணங்களால் செயல்படாமல் இருந்தது. முறையான அனுமதி பெற்று அங்கு சேதமடையாமல் இருந்த கொஞ்சம் நூல்களை மீட்டோம். பின்னர், கொடையாளர்கள் பலரின் உதவியுடன் தற்போது 1,700 நூல்களுடன் இந்த நூலகத்தை செயல்படுத்தி வருகிறோம்.
டிஜிட்டல் மயமாகி விட்ட காலத்தில் நூலகம் பெரிய வரவேற்பை பெறுமா என்று பலரும் கேட்டனர். வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்ற அனைவருமே புத்தகங்களை வாசிப்பதற்கு மாறாக நேசித்தனர். அது இன்றைய சூழலுக்கும் பொருந்தும். டிஜிட்டல் வடிவில் வாசிக்க முற்படும்போது நம் அனுமதியை பெறாமலே பல குப்பைகள் உள்ளே நுழைகின்றன. வயது உள்ளிட்ட காரணங்களால் அவற்றால் ஈர்க்கப்பட்டு விட்டால் இளையோரின் வாழ்வே முடிந்து விடும். ஆனால், நூலகங்களில் பல லட்சம் நூல்கள் இருந்தாலும் அவற்றில் நமக்கானவற்றை தேடி எடுக்கும் முயற்சியின்போது பார்வையில் படும் எந்த நூல்களுமே குப்பையாக இருக்காது. எனவே, நூலகம் என்பது எந்த காலத்திற்கும் தேவையான ஒன்றாக உள்ளது. எங்கள் ஊரில் நூலகம் இல்லாமல் நிறைய மாணவ, மாணவியர் தவிப்பதை நேரடியாக பல தருணங்களில் உணர முடிந்தது. எனவே தான் சிறு முயற்சியாக இந்த நூலகத்தை தொடங்கியுள்ளோம். இவ்வாறு கூறினார்.