

சமீபத்திய பேரிடர், பெரிய உந்து சக்தியாக மாறி, நம்மை ஒன்று கூட்டியுள்ளது. சமீபகாலமாக சமுதாயத்தின் மீது சலிப்பு ஏற்பட்டு காந்தி, விவேகானந்தர் போன்ற தலைவர்கள் மீண்டும் வரமாட்டார்களா என்ற ஏக்கம் உருவானது. ஆனால், நாமே நமக்கு தலைவர் என்பதை இந்த பேரிடர் உணர வைத்துள்ளது. இயற்கையால்தான் நாம் வளர்ந்தோம். இன்றைக்கு இயற்கையால் வாழ்வாதாரத்தை இழந்து, மறுபடியும் இயற்கைக்கு கைகொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். பொருளாதார வளர்ச்சி என்பது, சமுதாய வளர்ச்சி மட்டுமே அல்ல. இயற்கையை பாதுகாப்பதும்தான். சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, குப்பைகளை பிரிப்பது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா உயிரினங்களுக்கும் நீர்தான் அடிப்படையான ஒன்று. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதால், விலங்குகள் இடம்பெயர்ந்து செல்கின்றன. நீர்நிலைகளை அழிப்பவர்கள், எப்படி ஆறறிவு உள்ளவனாக இருக்க முடியும்?
பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிருங்கள் என அரசு சொல்லிக் கொண்டுதான் வருகிறது. அதை எல்லோரும் கடைபிடிப்போம். நீர்நிலைகளை முதலில் மீட்டு கொண்டு வருவோம். பின்னர், பழந்தமிழர்களின் வாழ்வை மீண்டும் கொண்டு வருவோம்.
இவ்வாறு நாசர் கூறினார்.