Published : 27 Mar 2017 08:23 AM
Last Updated : 27 Mar 2017 08:23 AM

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. அதன்பிறகே வாக்குச்சீட்டு முறையா அல்லது மின்னணு வாக்குப்பதிவா என்பது குறித்து தெரியவரும்.

ஜெயலலிதா மறைவால் காலி யான சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி நிறை வடைந்தது. 14 பெண்கள் உட்பட மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 24-ம் தேதி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்த பரிசீலனையை தேர்தல் பொது பார்வையாளரான ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷ், காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ஷிவ்குமார் வர்மா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். பரிசீலனையின்போது வைப்புத் தொகை செலுத்தாதது, வேட்புமனுக் களை முறையாக பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 45 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி.தினகரன், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட 82 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

மொத்தம் 84 சுயேச்சை வேட்பாளர் கள் வேட்புமனு தாக்கல் செய்திருந் தனர். அதில் 27 மனுக்கள் நிராகரிக் கப்பட்டு, 57 பேரின் மனுக்கள் ஏற்கப் பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

முக்கிய கட்சிகளின் பிரதான வேட் பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள தால், அவர்களுக்கான மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் திரும்பப் பெறப்படும். அதன்படி, 10 மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் திரும்பப் பெறப்பட்டால் மீதம் 72 வேட்பாளர்கள் களத்தில் இருப்பர். கடைசி நாளான இன்று சில வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே இறுதியாக எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள் என்பது தெரியவரும்.

ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்கள் இருந்தால் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன் படுத்த முடியும். 63 வேட்பாளர் களுக்கு மேல் இருந்தால் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டி இருக்கும். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடக்குமா அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுமா என்பது, இன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே தெரியவரும்.

பிரச்சாரம் சூடு பிடிக்கும்

ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். சுயேச்சை வேட் பாளர்களுக்கு இன்னும் சின்னம் வழங்கப்படாததால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உட்பட அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்காமல் உள்ளனர். அவர்களுக்கு சின்னம் கிடைத்த பிறகே பிரச்சாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் நடக்கும் பகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை யினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாகன சோதனை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. தொகுதியில் மொத்தம் 50 அமை விடங்களில் 256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 28 ஆயிரம் ஆண்கள், 1 லட்சத்து 34 ஆயிரம் பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட் டுள்ளது. அந்த இடங்களில் பாது காப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களில் கொடி கட்ட..

மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடத்தை விதிகளின்படி, வாகனங்களில் கொடிகளை கட்டவும், வாகனங்களில் காணொளி காட்சி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். காணொளி வாகனங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சார பொருளடக்கம் தொடர் பாகவும், வேட்பாளர்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் விளம் பரம் செய்வது தொடர்பாகவும், ரிப்பன் மாளிகையில் இயங்கும் ஊடக சான்றளிக்கும் குழுவிடம் 3 நாட்களுக்கு முன்பு, அலுவல் நேரத்தில் வழங்கி, சான்று பெற்ற பின்பு விளம்பரப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர் தேர்வை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x