Published : 12 Jun 2017 08:37 AM
Last Updated : 12 Jun 2017 08:37 AM

கைத்தறி ஜவுளி, ஜவ்வரிசி, மீன்பிடி வலைக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்கு தேவை: டெல்லி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

திரும்ப நிரப்பப்படும் கேன், சிறிய பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்படும் தண்ணீர், சிப்பியால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வறுகடலை, கைத்தறி ஜவுளி, ஜவ்வரிசி, மீன்பிடி வலை, மீன்பிடி கயிறு ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என, ஜிஎஸ்டி தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்தோரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வரி விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஜிஎஸ்டியின் 16-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்ட முன்வடிவு பரிசீலனை மற்றும் இயற்றுவதற்காக அறிமுகம் செய்யப்படும். வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்தோரிடம் இருந்து வரி விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக பல கோரிக்கைகள் வந்துள்ளன. சாமானிய மக்களின் நலன் கருதி, வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கருப்பட்டியை வரியில்லா வகைப்பாட்டில் வைத்தல், ஜவுளி மீது ஒரே சீரான வரி, ரூ.500-க்கு கீழ் விற்கப்படும் காலணிக்கு ரூ.5 வரி உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. திரும்ப நிரப்பப்படும் கேன், சிறிய பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்படும் தண்ணீர், சிப்பியால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வறுகடலை, கைத்தறி ஜவுளி, ஜவ்வரிசி, மீன்பிடி வலை, மீன்பிடி கயிறு ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். கறி மசாலா மற்றும் இதர நறுமணப் பொருட்கள், சின்னமிடப்படாத சர்க்கரை மிட்டாய்கள், மூக்கு கண்ணாடிகள் மற்றும் உதிரி பாகங்கள், ஊறுகாய்களுக்கு, நிலக்கரி சாம்பலால் தயாரிக்கப்படும் கல், சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்களுக்கு வரியாக ரூ.5 மட்டும் விதிக்கப்பட வேண்டும்.

விவசாயம் மற்றும் வீட்டு வசதி மின் பொருட்கள், கிரைண்டர்கள், எடை போடும் இயந்திரங்களுக்கு ரூ.18 என வரி விதிக்க வேண்டும். மாநில வட்டார மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் சின்னமிடப்படாத பிஸ்கெட்களுக்கும் குறைந்த வரி விதிக்க வேண்டும்.

கேளிக்கைகள் மீது உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்கும். அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் பட்சத்தில், இந்த இரு முறை வரி விதிப்பு சாமானிய மக்கள் மீது பெரும் சுமையை திணிக்கும். எனவே, கேளிக்கை துறை மீதான ஜிஎஸ்டி வரியை ரூ.12-க்குள் வைக்க வேண்டும். அதே போல், பட்டாசுத்துறை மீதான வரியை குறைக்க வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த வரி சீர்திருத்தத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம். அதே நேரம் நாம் தொழில்நுட்ப ரீதியாக தயாராக உள்ளோமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x