

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, மாள்வியா நகரில் ஷர்மிளா, ஆர்கேபுரத்தில் பிரகாஷ், பாலம் தொகுதியில் ரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
டெல்லியின் ட்ரி நகரில் சுப்ரமணியன், ரோகிணியில் செங்கோட்டையன் மற்றும் ராஜேந்திரா நகரில் தானப்பன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
முன்னதாக, டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது.
டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, இப்போது 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில் தேமுதிக நிர்வாகிகளை நியமித்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதியில் கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்தி வர முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.