

விடுமுறை நாட்களில் பள்ளி உடற் கல்வி ஆசிரியர்கள் மேல்படிப்பு பயில தனி கல்லூரி தொடங்க அனுமதிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த ஆர்.கனகராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் 20 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் உடற்கல்வி சான்றிதழ் படிப்பின் அடிப்படையில் பணியில் சேர்க்கப் படுகின்றனர்.
தற்போது உடற்கல்வி ஆசிரியர் கள் பணியில் இருந்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் பிபிஎட், எம்பிஎட் படிப்பதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் இல்லை. மேல்படிப்பு படிக்க விரும்பினால் விடுமுறையில் செல்ல வேண்டும். இதனால் பணப்பலன், ஊதிய உயர்வு, பணி மூப்பு ஆகியவற்றை இழக்க வேண்டியுள்ளது. அதேசமயம், பிற ஆசிரியர்களுக்கு பணியின்போதே தொலைநிலைக் கல்வியில் மேல்படிப்பு பயில வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சனி, ஞாயிறு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பிபிஎட், எம்பிஎட் படிக்க வாய்ப்பு வழங்குவதற்காக தனி கல்லூரி தொடங்க முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு 2012-ல் மனு அனுப்பினேன். 5 ஆண்டுகளாகியும் இதுவரை அனுமதி கிடைக்க வில்லை. மீண்டும் 18.3.2017-ல் மனு அனுப்பியும் பலனில்லை.
எனவே, பணியில் உள்ள உடற் கல்வி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் கல்வி பயில்வதற்கான தனி கல்லூரி தொடங்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், “உடற் கல்வி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பிபிஎட், எம்பிஎட் வகுப்பு கள் நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 8 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். கவுன்சில் அனுமதி வழங்கும் பட்சத்தில், அதனை பின்பற்றி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகமும் அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்