

ரயில்வே பாதுகாப்பு படையிடமிருந்து ரயில் கொள்ளை வழக்கு விசாரணை தமிழக ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழக ரயில்வே காவல்துறை ஆலோசனை நடத்தியது. அதற்குப் பிறகு இந்த வழக்கு தமிழக ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் வங்கிப் பணம் கொள்ளை குறித்து சேத்துப்பட்டு பணிமனையில் கியூ பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பின்னணி:
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8-ம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது.அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொள்ளையர்கள் திட்டம் போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். சாதாரண கொள்ளையர்களால் இதுபோன்று செய்ய முடியாது. பல கொள்ளைகளில் ஈடுபட்டவர்களால் மட்டுமே இப்படி துணிந்து செய்ய முடியும். எனவே, வட மாநில கொள்ளையர்கள் இங்குள்ளவர்களின் துணையுடன் கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.