

தமிழக கடலோரப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க ‘விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம்’ ஒன்றை தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இப்பகுதிகளில் சரக்கு மற்றும் மீன்பிடி துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், குடிநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கடலோரங்களில் இயற்கையாக மணல் இடம் பெயர்வதில் பாதிப்பு ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் அரிப்பு ஏற்படுவதால், கடலோரப் பகுதியில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கடல் அரிப்பைத் தடுத்து மீனவர்களின் குடியிருப்புகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை சார்பில் கடல் அரிப்பு தடுப்பான் கள் அமைப்பது, சுவர்களை எழுப்புவது, கற்களை கொட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட பகுதியில் கடலரிப்பு இல்லா விட்டாலும், பிற பகுதிகளில் கடல் அரிப்புகள் அதிகமாக ஏற்படு கின்றன. கடந்த மாதம் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் 27 வீடுகள், கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் புகும் அளவுக்கு கடல் அலைகளின் வேகம் இருந் தது. இது தொடர்பாக அப்பகுதி யைச் சேர்ந்த பொது மக்கள் கூறும் போது, “இத்தனை ஆண்டு களில் இதுபோன்று அலைகளும், கடல் அரிப்பும் சீனிவாசபுரத்தில் ஏற்பட்டதில்லை” என்றனர்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் அறிவியல் பூர்வமாக இல்லை. ஒரு பகுதியில் அரிப்பை தடுக்க மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகளால், மற்றொரு பகுதி யில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தமிழக கடலோரப் பகுதிக் கென்று ‘விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆசி பெர்னான்டஸ், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர் வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதை விசாரித்த அமர்வு, ‘விரிவான கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டம்’ ஒன்றை உருவாக்கி, அதன்படி, கடல் அரிப்பை தடுக்கும் பணியை தொட ருமாறு தமிழக அரசுக்கு உத்தர விட்டிருந்தது.
இத்திட்டத்தை உருவாக்கு வதற்காக, மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் குறைவான தொகையாக ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் என குறிப்பிட்டிருந்த சென்னை ஐஐடி பேராசிரியர் வி.சுந்தருக்கு, திட்டம் உருவாக்கும் பணி வழங்கப்பட்டது.
வரைவு திட்டம்
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “பேராசிரியர் சுந்தர், முதல் கட்டமாக மாவட்ட வாரியாக கடல் அரிப்பு ஏற்படும் இடங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள், கடல் அரிப்பால் கடல்வாழ் உயிரி னங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை யிடம் விளக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வரைவு திட்டம் ஒன்றை உருவாக்கி, பொதுப்பணித்துறை, மீன்வளத் துறை, வனத்துறை ஆகிய துறை களைச் சேர்ந்த அதிகாரிகளின் கருத்தறிய வழங்கியுள்ளார். இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் ஒப்புதல் பெற்ற பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்” என்றார்.