

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர், பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன், ஜி.கே.வாசன் உட்பட 30 ஆயிரத் துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதி களில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர் மறியல் போராட்டத் துக்கு தமிழ்நாடு விவசாய சங்கங் களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத் திருந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்தி ருந்தன.
அதன்படி, முதல் நாளான நேற்று காலை 6 மணி முதலே ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தாம்பரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எழும்பூரில் தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மட்டும் சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ், கொருக்குப் பேட்டை, எழும்பூர், மாம்பலம், பெரம்பூர், சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் 5,170 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரில் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வேலூர் காட்பாடி யில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் தடியடி
திருச்சி குடமுருட்டி ரயில் நிலையத்தில் திரண்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், ரயில் பாதையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
மதுரை ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணியினர் மறிய லில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் நலக் கூட்டணியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்கள் ரத்து
இந்தத் தொடர் மறியலால் மயிலாடுதுறை - மன்னார்குடி, திருவாரூர் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - திருவாரூர், காரைக்கால் - திருச்சி ஆகிய பயணிகள் ரயில் சேவை நேற்று முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இது தவிர 5-க்கும் அதிகமான விரைவு ரயில்கள் சுமார் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
30 ஆயிரம் பேர் கைது
சென்னை மற்றும் புறநகரில் 5,491, வேலூர், திருவண்ணாமலை யில் 2,230, கோவை, திருப்பூரில் 1,915, திருநெல்வேலி, தூத்துக்குடி யில் 738, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1,916, திருச்சி, கரூர், அரியலூரில் 2,249, தஞ்சாவூரில் 1,992, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 314, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 2,512, தருமபுரி, கிருஷ்ணகிரியில் 1,490 என தமிழகம் முழுவதும் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் திரண்டி ருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை போலீஸார் அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்யவில்லை. மறியலில் ஈடுபட்டு கைதானவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக ரயில் நிலையங்களில் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.