

காவல்துறையினரின் ரோந்துப் பணிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சென்னையில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும் குறுகலான தெருக்களிலும் ரோந்துப் பணிகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதை மேம்படுத்தும் வகையில் போலீஸாருக்கு ஜிபிஎஸ், தொலைத் தொடர்பு கருவி உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட ஜீப்புகள், இருசக்கர வாகனங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரோந்துப் பணி களை மேலும் மேம்படுத்துவதற்காக ரூ.1.12 கோடியில் 100 இருசக்கர வாகனங்கள், 250 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒலி எழுப்பான்கள், எல்ஈடி விளக்குகள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை முதல்வர் ஜெய லலிதா நேற்று காவல்துறைக்கு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ரோந்துப் பணி யில் ஈடுபடும் காவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் வடிவமைக் கப்பட்ட மேல்சட்டை, தலைக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறுகலான தெருக்களிலும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
மின்னணு இயந்திரம்
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறைக்கு ஏற்கெனவே 300 மின்னணு ரசீது வழங்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.1 கோடி செலவில் 100 உயர் ரக மின்னணு ரசீது கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை வழங்கும் அடையாளமாக 5 போக்குவரத்து காவலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.