

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 1,200 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) தீவிரமாக காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர்.
அதன்பின் சுகாதாரத்துறை எடுத்த நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப் பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தடுக்க நடவடிக்கை
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுவது தொடர்பாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களாக பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது. இந்த ஆண்டு திடீரென்று பன்றிக்காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. தென்மாவட் டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காணப் படுகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது. காய்ச்ச லுக்கு தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலை கண்டு பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
அறிகுறிகள்
காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். அதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். முறையாக சிகிச்சை பெற்றால் ஒருவாரத்தில் காய்ச்சல் குணமடைந்துவிடும். யாரும் தானாக கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.
உதவிக்கு 104..
சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலால் கர்ப்பிணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பன்றிக்காய்ச்சல் குறித்த சந்தேகத்துக்கு மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.
நோய் பரவுவது எப்படி?
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகின்றன. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதனப் பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொட்டால் கிருமித் தொற்று ஏற்படுகிறது. அதனால் கைகளை நன்றாக கழுவ வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை தினமும் கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து இடைவெளிவிட்டு இருக்க வேண்டும்.