Last Updated : 14 May, 2017 05:31 PM

 

Published : 14 May 2017 05:31 PM
Last Updated : 14 May 2017 05:31 PM

திரிசூலகிரி: ராஜராஜ சோழனின் அமைச்சர் உருவாக்கிய பர்வதமலை நகரம் கண்டுபிடிப்பு

முதலாம் ராஜராஜ சோழன் அவையில் இருந்த அமைச்சர் ஜெயந்தனை வெளிச்சத்திற்குக்கொண்டுவரும் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பர்வத மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கல்வெட்டுகளும் செப்பேடுகளும், கோவில்களுக்கு பல்வேறு மானியங்களை வழங்கிய சோழப் பேரரசின் சாதனைகளை புகழ்வதாகவே உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட ஒரு புதிய கல்வெட்டு, ராஜ ராஜ சோழனின் இதுவரை அறியப்படாத ஒரு அமைச்சரைப் பற்றி வெளிக்கொண்டுவந்துள்ளது.

கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி தென்மாதேவமங்கலத்தில் அமைந்துள்ள பர்வத மலையில் இந்த 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டைக் கண்டுபிடித்தவர் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் அ.சதீஷ். தனது சொந்த ஊராகவும் விளங்கும் இவ்வூரின் மலையில் பாறை ஓவியங்களையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதுபற்றி பேரா. அ.சதீஷ் கூறியதாவது:

ஜெயங்கொண்ட சோழமண்டலத்தின் (வடக்கு தமிழ்நாட்டின் 18 சிற்றரசுகள்) மீதான ராஜராஜ சோழனின் வெற்றியை கொண்டாடுதவற்காகவே 'திரிசூலம்' எனும் ஒரு புதிய நகரத்தை அவரது அமைச்சர் ஜெயந்தன் உருவாக்கினார். திரிசூலம் மலையில் அமைந்துள்ளதால் திரிசூலகிரி என அழைக்கப்பட்டது.

எந்தஒரு சோழ கல்வெட்டிலும் ராஜராஜ சோழனைத் தவிர, வேறு பெயர்கள் என்று எதுவும் இல்லை என்பதே இதுவரை அறிந்த செய்தி. தொல்பொருள் ஆய்வுத்துறையில் பதிவுசெய்யப்பட்டுள்ள நோபுரு கரசிம்ஹா அல்லது தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் எனும் இருபெரும் சோழ ஆவணங்களில் கூட ஜெயந்தன் பெயர் பதிவுசெய்யப்படவில்லை என தொல்லியல்துறையில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் இப்போது கண்டறியப்பட்ட கல்வெட்டு நிச்சயம் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.

சமஸ்கிருத மொழியில் செதுக்கப்பட்ட இந்த கல்வெட்டை புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை படியெடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் ஆங்கிலத்திலும் மொழிமொழிபெயர்த்துள்ளது. அதில் ராஜராஜ சோழன் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரிடம் இருந்த ஜெயந்தன் எனும் மந்திரி நல்ல பேச்சாற்றல் மிக்கவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகத் தலைவராகவும் ஜெயந்தன் உலகை அளந்து அதை வென்றவராகவும் ஜெயந்தன் பெயர் விதந்தோதப்பட்டுள்ளது. இவர் நதிக்கரை அருகே இருந்த மலையின் மீது திரிசூலகிரி நகரத்தை உருவாக்கினார் என அமைச்சரின் புகழை உணரும் வகையில் குறிப்புதவிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

என் சொந்தஊரான இங்கு, கல்வெட்டுக்கள் தவிர, என்னால் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்களில், நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சாதாரண மக்கள் ஒன்றிணைந்து இங்கு பெண்தெய்வ வழிபாடு மேற்கொண்டதை அறியமுடிகிறது.

இரண்டுஅடுக்கு குகை ஒன்றும் அங்கு இருப்பதை நான் கண்டேன். இதன் மேல் தளத்தின் தரையில்தான் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பாறை ஓவியங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் சாதாரணமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகையில் அந்த மக்கள், பெண் தெய்வங்களை வழிபட்டதாக இந்தக் கல்வெட்டுக்கள் நமக்குத் தெரிவிக்கின்றன என்கிறார் பேராசிரியர் சதீஷ்.

மேலும் ”ஒரு பாழடைந்த கோட்டை பர்வத மலைகளின் உச்சியில் உள்ளது. இக்கோட்டைக்கு திரிசூலகிரி என்றே ஜெயந்தன் பெயரிட்டுள்ளான்.

ஆலயத்துடன் ஒரு கோட்டை மற்றும் நிறைய மண்டபங்கள் இருந்ததால் திரிசூலகிரியை ஒரு நகரம் என்றே கல்வெட்டு குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான, மலைபடுகடாம் நூலில் குறிப்பிடப்படும் 'நவிரமலை' இந்த பர்வத மலைதான்.

சங்க காலத்தில் அரசாண்ட ஒரு மன்னனான, நன்னன் செய் நன்னன் இந்தக் கோட்டையைக் கட்டியதாக நம்பப்படுகிறது. ஆனால் இது விவாதத்திற்குரியது ஏனெனில் சங்க காலத்தில் கல்கோட்டைகள் இல்லை என்று நம் எண்ணத்தில் பதிந்துள்ளது.

தஞ்சை பெரிய கோவில் கட்டியமைக்காக உலகளாவிய புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் அதிகார எல்லைக்குள் அமைந்திருக்கும் இந்த திரிசூலகிரி கோட்டை போர்க்காலத்தில் இடித்துவிடமுடியாதவகையில் கட்டப்பட்ட கல்கோட்டையாகும்” என்கிறார் பேராசிரியர் சதீஷ்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x