

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆளுநர் (பொறுப்பு) சி.வித்யாசாகர் ராவ், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பாண்டியராஜன், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் பி. ராம மோகன ராவ், டிஜிபி டி.கே.ராஜேந் திரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கிண்டி யில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக நேற்று காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வந்தடைந்தார். குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கொடிமாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு 34 நாடுகளைச் சேர்ந்த 420 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் மத்தியில் பிராணாப் முகர்ஜி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் குடியரசுத் தலைவர், இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பகல் 1 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.