Published : 30 Jan 2014 12:30 PM
Last Updated : 30 Jan 2014 12:30 PM

இலவச பொது வை-ஃபை சேவை வழங்க வேண்டும்- சென்னைவாசிகள் கோரிக்கை

பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது போல் சென்னையிலும் இலவச பொது வை-ஃபை சேவை முனையங்களை உருவாக்க வேண்டுமென்று சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வை-ஃபை சேவை

வயர்லெஸ் சிக்னலின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இணைய வசதியை பெற வை-ஃபை தொழில்நுட்பம் உரு வாக்கப்பட்டது. அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பயன் படுத்தப்பட்டு வந்த இந்த வை-ஃபை சேவை சில ஆண்டுகளுக்கு முன் பொது இடங்களில் பயன் பாட்டிற்கு வந்தன. பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக இணை யத்தை பயன்படுத்தும் விதமாக, வளர்ந்த நாடுகள் பல பொது வை-ஃபை முனையங்களை உருவாக்கின. முக்கியமாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் பொது வை-ஃபை சேவை வழங்கப்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் வை-ஃபை சேவை

இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூருவில் நாட்டின் முதல் பொது வை-ஃபை இலவச சேவை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப் படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 6 முக்கிய பகுதிகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இச்சேவையால் பெங்களூருவாசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த பொது வை-ஃபை சேவையின் மூலம் நொடிக்கு 512 கிலோ பைட் வேக அளவில் இணையத்தை பயன்படுத்த முடியும். பெங்களூரு வில் மேலும் 10 இடங்களில் விரைவில் வை-ஃபை சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சென்னைக்கு கிடைக்குமா?

பெங்களூருவைப் போன்று பொது வை-ஃபை சேவையை சென்னையிலும் வழங்க வேண்டும் என்கின்றனர் சென்னை வாசிகள். இதற்கு முன்னர் சென்னை விமான நிலையம் போன்ற மிகச் சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தச் சேவை, நகரின் பிரதான பகுதிகளில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து மென்பொருள் துறை வல்லுநரான பிரபு கூறிய தாவது:

பெங்களூருவிற்கு நிகராக சென்னையிலும் ஐ.டி. சந்தை விரிவடைந்துள்ளது. நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்துவதில் சென்னை வாசிகள் சளைத்தவர்கள் இல்லை. சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலால், இணையத்தில் செய்ய வேண்டிய அலுவலக வேலைகள் பல தாமதமாகவே முடிக்கப்படுகிறது. சென்னையில் பொது வை-ஃபை உருவாக்கப்பட்டால் தேவையற்ற நேர விரயத்தை தவிர்க்க முடியும். எனவே தமிழக அரசு, பொது வை-ஃபை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை திட்ட அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலகத்தில் இருந்து உரிய உத்தரவுகள் வந்ததும், இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x