Published : 09 Feb 2014 11:19 AM
Last Updated : 09 Feb 2014 11:19 AM

தேமுதிக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: நில அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை

சேலத்தில் நில அபகரிப்பு வழக்கில் தேமுதிக எம்.எல்.ஏ. மோகன்ராஜ் மீது சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் வடக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மோகன்ராஜ். இவர் தே.மு.தி.க. சேலம் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவர் மீது பெரமனூரைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு அழகாபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 1200 சதுர அடி நிலத்தை அபகரித்துக் கொண்டதாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் எம்.எல்.ஏ. மோகன்ராஜ், அவரது மனைவி உண்ணாமலை மற்றும் விஸ்வநாதன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. தர், காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ஞான சேகரன் ஆகியோர் சேலம் நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 135 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் 25 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள அழகாபுரம் மோகன்ராஜ், கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x