

தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல் அனுப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று மாலையில் இந்த அலுவல கத்துக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அலுவலக ஊழியர்கள் அதைப் பிரித்துப் பார்த்தபோது சில வெடி பொருட்களும், திரியும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்சலை கைப்பற்றி சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
பார்சலுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில், இறைச்சிக்காக மாடுகளை விற்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் நடவடிக்கை களைக் கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததாக போலீ ஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோல நடந்து கொண்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசிவருகிறார். தமிழிசையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி தமிழிசையின் செல்போன் எண்ணுக்கு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசி கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த 6-ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு இதேபோல ஒரு வெடிமருந்து பார்சலும், மிரட்டல் கடிதமும் வந்தன. தற்போது நேற்று பாஜக அலுவலகத்துக்கு மீண்டும் வெடிமருந்து பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர் மிரட்டல்
தொடர் மிரட்டல் குறித்து போலீஸார் கூறும்போது, “அனைத்து மிரட்டல்களும் ஒரே மாதிரி இருப்பதால் அனைத்தையும் ஒரே நபர்தான் செய்திருக்க வாய்ப்புள்ளது. பார்சல்களில் தீபாவளி பட்டாசுகள் மட்டுமே இருந்தன. தமிழிசை சவுந்தரராஜனுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபரை நெருங்கி விட்டோம். அவரைப் பிடித்தால் பல விவரங்கள் தெரியவரும்” என்றனர்.