கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் கோளாறு: உடனே இழுத்து மூட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் கோளாறு: உடனே இழுத்து மூட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
Updated on
1 min read

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அலகுகள் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்தி, ஏற்கெனவே உள்ள 1 மற்றும் 2 அலகுகளை இழுத்து மூடவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலை தொடர்ந்து பிரச்சினைக்குரியதாகவும், அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்துவருகிறது.

இந்த அணுஉலை ஆரம்பித்த நாள் முதலே தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. 2014 அக்டோபரில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் 'டர்பைன்' என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து அவ்விசையாழிகள் கடுமையாக சேதத்திற்கு உள்ளானது. அதற்கும் சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்திற்கு இலக்கானார்கள்.

அதேபோல் 2014 மே 26 முதல் ஜூன் 27 வரை ஒரு மாத காலத்திற்கு அணுஉலையின் நீராவி ஆக்கி ஜெனரேட்டர் சரியான முறையில் நீராவியை உற்பத்தி செய்யாததன் காரணமாக 3.25 கோடி ரூபாய் அளவிற்கு 6 லட்சம் லிட்டர் டீசலைப் பயன்படுத்தி அந்த நீராவியை உற்பத்தி செய்வதற்கு வாங்கப்பட்டுள்ளது.

தற்போது அணுஉலையின் இரண்டாவது அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் அலகு வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தியைத் துவங்கிவிட்டது என்று கடந்த மார்ச் 31, 2017 அன்று அறிவிப்பு செய்த ஒருவார காலத்திற்குள் இதுபோன்ற கோளாறு ஏற்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதேபோன்று அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் இருக்கும்.

8 கோடி தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட இந்த அணுஉலை எந்த அளவு பாதுகாப்பானது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, உடனே கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அலகுகள் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்தி ஏற்கெனவே உள்ள 1 மற்றும் 2 அலகுகளை இழுத்து மூடவேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in