மீண்டும் ரிசர்வ் வங்கி ஸ்பெஷல் ரயில்: பணத்தை இனிமேல் தனி ரயிலில் அனுப்ப முடிவு

மீண்டும் ரிசர்வ் வங்கி ஸ்பெஷல் ரயில்: பணத்தை இனிமேல் தனி ரயிலில் அனுப்ப முடிவு

Published on

ரயில் கொள்ளை சம்பவத்தால் பாடம் கற்றுள்ள ரிசர்வ் வங்கி, தனது பணத்தை பாதுகாப்பாக கொண்டுசெல்ல தனி ரயில்தான் ஏற்றது என்ற முடிவுக்கு மீண்டும் வந்துள்ளது. கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு இருந்ததுபோல ‘ரிசர்வ் வங்கி ஸ்பெஷல்’ என்ற தனி ரயிலிலேயே வங்கியின் பணத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் சமீபத்தில் எடுத்துவரப்பட்ட ரிசர்வ் வங்கியின் ரூ.5.75 கோடி பணம், ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிசர்வ் வங்கி அளித்த புகாரின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுப்பது தொடர்பாக ரயில்வே மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல பணத்தை எடுத்துச் செல்ல, சரக்கு ரயில் போல ‘ரிசர்வ் வங்கி ஸ்பெஷல்’ என்ற தனி ரயில் இயக்கப்பட்டது. அதில் வெறும் 4 பெட்டிகள் மட்டுமே இருக்கும். பணம் இருக்கும் பெட்டிகளுக்கு முன்னும் பின்னும் உள்ள பெட்டிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக செல்வார்கள்.

அந்த ரயில் எங்கும் நிற்காது. சிக்னலுக்காக எங்காவது நின்றால் கூட, போலீஸார் உடனே துப்பாக் கியுடன் ரயிலை விட்டு இறங்கி நாலாபுறமும் பாதுகாப்புக்கு நிற்பார்கள். அதனால் யாரும் அந்த ரயிலை நெருங்கமாட்டார்கள்.

தனி ரயிலில் பணத்தை அனுப்பிய வரை இதுபோல கொள்ளை சம்பவம் நடந்ததே இல்லை. தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவம் ரிசர்வ் வங்கிக்கும், காவல் துறைக்கும், ரயில்வே துறைக்கும் மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்துள்ளது. பணத்துக்காக தனி ரயில் இயக்குவதால், போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாகும். என்றாலும்கூட, அதுவே முழு பாதுகாப்பானது என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.

எனவே, புதிய ரூபாய் நோட்டு கள் அல்லது பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை ‘ரிசர்வ் வங்கி ஸ்பெ ஷல்’ என்ற தனி ரயில் மூலமாகவே அனுப்புவது என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்திருப்பதாகத் தெரி கிறது. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

‘ரிசர்வ் வங்கி ஸ்பெஷல்’ என்ற தனி ரயிலில் பணத்தை அனுப்பும் நடைமுறை, அதிக செலவினம் காரணமாகவே நிறுத்தப்பட்டது. இப் போது வரை மாதம் 1 அல்லது 2 முறை ஒரே ஒரு சரக்குப் பெட்டியில் பணக் கட்டுகள் அனுப்பப்பட்டு வந்தன என்று ரயில்வே பார்சல் அலுவலகத் தரப்பில் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in