

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ஐ அதிகம் பயன்படுத்தியவர். அவர், எந்த அறிவிப்பையும் 110-ன் கீழ்தான் அறிவிப்பார். 110-உடன் '0' சேர்த்தால் 1100. அப்படித்தான் அம்மா அழைப்பு மைய சேவைக்கான தொலைபேசி எண்ணையும் அமைத்துள்ளார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் புதன்கிழமை காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து அவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுகவைத் தொடர்ந்து தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையின் வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ஐ அதிகம் பயன்படுத்தியவர். எந்த அறிவிப்பையும் 110-ன் கீழ்தான் அறிவிப்பார். 110-உடன் '0' சேர்த்தால் 1100. அப்படித்தான் அம்மா அழைப்பு மைய சேவைக்கான தொலைபேசி எண்ணையும் அமைத்துள்ளார்.
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம், காதில் பூ சுற்றுவது எனக் கூறுவதுண்டு. அதுபோலத்தான் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு வழங்குவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
முதல்வர் எப்போதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைமைச்செயலகம் வந்து செல்கிறார். காணொலி காட்சி மூலமே அரசின் பல்வேறு திட்டங்களும் துவக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார்.