தலித்துகள் மீதான வன்முறை தமிழகத்தில் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

தலித்துகள் மீதான வன்முறை தமிழகத்தில் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
Updated on
2 min read

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான வன்முறைகளின் அளவு உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலித் மக்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதில் பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மீதான வன்முறைகள் குறித்து மாநிலவாரியான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி இந்திய அளவில் தலித் மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 47,064ஆக இருந்த தாக்குதல்கள், 2015ல் 45,003ஆகக் குறைந்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான வன்முறைகளின் அளவு உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலித் மக்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என்பதையே இந்தப் புள்ளி விவரம் வெளிப்படுத்துகிறது. தலித்துகளைத் தாக்கும் சாதிவெறியர்கள் மீது தமிழக அரசு இப்போதாவது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டில் 22 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தலித்துகள் படுகொலை செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. 2015ஆம் ஆண்டில் 50 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகக் காவல்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு 33 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். 2015ஆம் ஆண்டிலோ 43 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். தலித் பெண்கள் மானபங்கப்படுத்தப்படும் நிகழ்வுகள் 2014ஆம் ஆண்டைவிட 2015ஆம் ஆண்டு 4 மடங்கு அதிகரித்துள்ளன. பாலியல் தொந்தரவு கொடுக்கப்படும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

தலித்துகளின் குடியிருப்புகளை சாதிவெறியர்கள் கும்பலாகச் சென்று தாக்குகின்ற சம்பவங்கள் சுமார் 5 மடங்கு உயர்ந்துள்ளன. 2014ஆம் ஆண்டில் 39 கலவரங்கள் நடந்தன. 2015ஆம் ஆண்டிலோ அது 185ஆக உயர்ந்துள்ளது. தலித் கிராமங்களைச் சூறையாடும் சம்பவங்கள் 14 நடந்துள்ளன. தலித் குடியிருப்புகள் தாக்கப்படுவதில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து இந்திய அளவில் 2வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்களின்கீழ் அல்லாமல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தலித்துகள் மீதான வன்முறை தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2015ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1198ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்முறைகள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி மேற்கொண்டுவரும் வெறுப்புப் பிரச்சாரமே முதன்மையான காரணமாக இருக்கிறது. தமிழக அரசு அந்த வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக முதல்வர் சட்டமன்றத்திலேயே இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைப் பற்றி அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதில் தொடர் நடவடிக்கை இல்லாமல் போய்விட்டது.

தலித்துகள் மீதான வன்முறை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். சமூகத்தில் மிகவும் பலவீனமான தலித்துகள் மீது வன்முறையை ஏவுகிறவர்களை பயங்கரவாதிகளாகக் கருதி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் இதற்குக் குரல் எழுப்ப வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in