Published : 19 Oct 2013 09:27 AM
Last Updated : 19 Oct 2013 09:27 AM

மோசடி வழக்கில் பி.டி.அரசகுமார் கைது

தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான பி.டி.குமார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் புதுக்கோட்டையில் அவர் துவங்க திட்டமிட்டிருந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாக 14 லட்ச ரூபாய் பணம் பி.டி.குமார் வாங்கினாராம். சொன்ன படி அனுமதி வாங்கித் தராததால் சிவானந்தம் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சாலி கிராமத்தில் உள்ள வீட்டி லிருந்த குமாரை புதுகை காவல் துறையினர் கைது செய்தனர்.

“படித்தவன் பாடம் நடத்து கிறான், படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்” என்கிற புதுக் கவிதை வரிகள் பி.டி.குமாருக்கு அப்ப டியே பொருந்தும். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பனப்பட்டியை சேர்ந்த சாதாரண மில் தொழிலாளரான தியாகராஜனின் மகன்தான் இவர். தனது தந்தை பணிபுரிந்த மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டுமே படித்த இவர் விராலிமலையில் ஒரு நர்சரி பள்ளியை தொடங்கினார்.

நர்சரி பள்ளி நல்ல விதமாக இயங்கவே இலுப்பூர், அன்ன வாசல், புதுக்கோட்டை என அடுத்தடுத்து கிளைகளை துவங்கினார். பிறகு சிலருக்கு நர்சரி பள்ளி துவங்க ஆலோசனைகள் வழங்கி வந்தவர், தமிழ்நாடு நர்சரி பள்ளிகள் சங்கம் என ஒரு அமைப்பை துவக்கி அதற்கு இவரே தலைவரானார். 15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் இவருக்கு கற்பக விருட்சம் போல் பணத்தை அள்ளிக் கொட்டியது. பள்ளி துவங்க அங்கீகாரம் வாங்கித் தருகிறேன் என பலரிடம் சொல்லி லட்ச லட்சமாக பணத்தைக் கறந்தார். காசோலை மோசடி வழக்குகள் பல இவர் மீது அறந்தாங்கி, மணப்பாறை உள்பட பல இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களில் இவர், இவரது குடும்பத்தினர் பங்கு தாரர்களாக உள்ளனர்.

கல்வி நிறுவனம் துவங்க தயாராக இருக்கும் நபரிடம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து முடித்து தருகிறேன் என முதலில் ஒரு தொகையைக் கேட்பார். அதைக் கொடுக்க பண வசதியில்லை என கல்வி நிறுவனத்தை துவங்க விரும்புபவர் பதில் சொல்லும்போது, நான் சொல்லுகிற நபரை பங்குதாரராக சேர்த்துக்கொள். அவரிடம் நான் பாக்கித் தொகையை வாங்கிக் கொள்கிறேன் எனச் சொல்லி தனது குடும்பத்தில் ஒருவரையோ அல்லது தனது ஆதரவாளர் யாராவது ஒருவரையோ பங்குதாரராகச் சேர்த்துவிடுவார். பின்னர் அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இப்படி இவர் கல்வி நிறுவனங்கள் சிலவற்றை அபகரித்துக் கொண்ட வழக்குகளும் திண்டுக்கல், வத்தலகுண்டு ஆகிய இடங்களில் உள்ளன.

குண்டர் தடுப்பு சட்டம்?

திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தைக் கலைத்துவிட்டு தனது பெயரை பி.டி.அரசக் குமார் என நியூமராலஜி பார்த்து மாற்றிக்கொண்டார். பிறகு தேசிய பார்வர்டு பிளாக் என்கிற பெயரில் அரசியல் கட்சி துவங்கினார். தனது பெயர், கட்சிப் பெயர் ஆகியவற்றை மாற்றிக்கொண்டாலும் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் வாங்கி ஏமாற்றும் வழக்கத்தை மட்டும் குமார் மாற்றிக் கொள்ளவே இல்லை. இவர் மீது உள்ள பல்வேறு புகார்களைத் திரட்டி வருகிறது காவல்துறை விரைவில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயலாம் என்பதே இப்போதைய நிலவரம்.

எஸ்.ஆர்.தேவர் கைது

காரைக்குடியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் காரைசுரேஷிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் கொடுத்த புகாரின்பேரில் பி.டி.குமார் கட்சியின் தலைவராக உள்ள எஸ்.ஆர். தேவரை காரைக்குடி வடக்கு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x