

சென்னையில் நேற்று நடை பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப் பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. கடந்த 12-வது ஊதிய ஒப்பந்தம் 31.08.2016-ல் முடிவ டைந்த நிலையில், தற்போது 1.09.2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்கு வரத்து கழகப் பயிற்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
48 தொழிற்சங்கங்கள்
இந்தப் பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை துணை செயலாளர் வெங்கடேசன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 48 தொழிற்சங்க பேரவை மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இப்பேச்சுவார்த்தைக் குறித்து தொமுச பேரவையின் பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது:
இப்பேச்சுவார்த்தையில் போக்கு வரத்துக் கழகங்களில் தொடர்ந்து போடப்படும் ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இதற்கு நிதி இடர்பாடு காரணமாக கூறப்படுகிறது. அதே மாதிரி எங்களுக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும்.
பட்ஜெட்டில் நிதி
அதேபோல், விடுப்பை சரண்டர் செய்தால் பணம் கொடுப்பது கிடையாது. டிஏ, அரியர்ஸ் என பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. இதற்கு நிதி இடர்பாடு காரணம் என போக்குவரத்துக் கழகம் கூறுகிறது. எனவே, போக்குவரத்துக் கழகங்களை சேவைத் துறையாக கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, அப்படி நிதி ஆதாரத்தை மேம்படுத்திய பிறகு ஒரு பேச்சுவார்த்தை நடத்துவதும், ஒப்பந்தம் போடுவதும்தான் சரியாக இருக்கும்.
இதற்காக கால அவகாசம் எடுத்துக் கொண்டு முதலமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரிடம் கலந்து பேசி, ஒரு உறுதியான செயல் திட்டத்துடன் வந்தால் ஒப்பந்தம் போடுவது சரியாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவித்தோம். அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஏகமனதாக எங்கள் கருத்தை வற்புறுத்தியதன் அடிப்படையில் அரசிடம் ஆலோசனை செய்து விட்டு வருவதாக தெரிவித்துள் ளனர். இதையடுத்து, பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப் பட்டுள்ளது என்றார்.