Published : 17 Mar 2017 11:06 AM
Last Updated : 17 Mar 2017 11:06 AM

10-ம் வகுப்பு ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வில் தமிழ்வழி மாணவர்களை திணற வைத்த கேள்விகள்: தூத்துக்குடி ஆசிரியர் கருத்து

10-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், தமிழ்வழி மாணவர்கள் சற்று திணறும் வண்ணம் சில கேள்வி கள் கேட்கப்பட்டிருந்ததாக தூத்துக் குடி ஆசிரியர் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு குறித்து தூத்துக்குடி தூய பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் வி.பெனிட்டன் கூறியதாவது:

ஆங்கிலம் இரண்டாம் தாளை பொறுத்தவரை துணைப்பாடம் மற்றும் பயிற்சிகளில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். முதலில் கேட்கப்பட்டிருந்த 25 ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்கள் மிகவும் எளிமையாகவே இருந்தன. மேலும், கடிதம் எழுதுதல், படத்தை பார்த்து வாசகங்கள் எழுதுதல், வழிகாட்டி பகுதிக்கான கேள்விகளும் எளிதாக இருந்தன. 10 மதிப்பெணுக்கான பத்தி எழுதுதல் பகுதி, முதல் பாடத்திலிருந்தே கேட்கப் பட்டிருந்ததால் அனைத்து மாணவர்களும் நன்றாக எழுதியிருப்பார்கள்.

அதேநேரம், தமிழ்வழி மாணவர்களை திணறடிக்கும் வகையில் 4 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 6-வது கேள்வியான மன வரைபடம் குறித்த கேள்வி, 9-வது கேள்வியான உரையாடல், 13-வது கேள்வியான வார்த்தைகளை விரிவாக்கம் செய்து எழுதுதல், 18-வது கேள்வியான பாடல் வரிகளில் இருந்து கேள்விக ளுக்கு விடையளித்தல் ஆகிய 4 கேள்விகளிலும் தமிழ்வழி மாணவர்கள் சற்று திணறியிருப் பார்கள்.

இந்தக் கேள்விகள் பாடங்களுக்கு உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. மேலும், சிந்தித்து எழுதும் வகையில் சில கேள்விகள் இருந்தன. எனவே, திறம்பட எழுதினால் மட்டுமே இந்த கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை பெற முடியும். பின்தங்கிய மாணவர்கள் இந்த கேள்விகளில் சற்று தடுமாறியிருக்க வாய்ப்புள்ளது.

வெளியிலிருந்து கேட்கவில்லை

இந்த 4 கேள்விகளைத் தவிர மற்ற அனைத்து கேள்விகளும் மிகவும் எளிதாக இருந்ததால் அவற்றில் நல்ல மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து கேள்விகளும் பாடத்திட்டத்திலிருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. வெளியே இருந்து எந்த கேள்வியும் வரவில்லை. பெரும்பாலான கேள்விகள் வழக்கமாக கேட்கப்படுபவையாக இருந்ததால் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் தோல்வி விகிதம் குறைவாகவே இருக்கும்’’ என்றார் அவர்.

வி.பெனிட்டன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x