

பழநி அருகே புதன்கிழமை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கோணிக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சிஜோ (33). இவரது மனைவி சினு (30). இவர்களுக்கு இசக்கியேல்(4) என்ற குழந்தை உள்ளது. இவர்கள் காரில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருச்சூரில் இருந்து பழனி வழியாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்றனர். சிஜோ, சினு, குழந்தை இசக்கியேல், இவர்களது உறவினர் ஜான்சன் (48), அவரது மனைவி லிசி (43) மற்றும் உறவினர் எல்பன் குழந்தை டேனியல் (4) ஆகியோரும் காரில் வந்துள்ளனர். ஜான்சன் மகன் அலெக்ஸ் (22) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். இவர்களுடன் மற்றொரு காரில் உறவினர் எல்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர்.
அப்போது, மதுரையில் இருந்து பழநியை நோக்கி சரக்கு லாரி வந்துள்ளது. லாரியை மதுரை பாலமேட்டைச் சேர்ந்த செல்வராஜ் (46) என்பவர் ஓட்டி வந்தார். பழனி அருகே அனுப்பம்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது, கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன்பகுதியில் கார் புகுந்து பலத்த சேதமடைந்தது.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே காரில் இருந்த சிஜோ, அவரது மனைவி சினு, குழந்தைகள் இசக்கியேல், டேனியல், ஜான்சன், அலெக்ஸ் ஆகியோர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய லிசியை பொதுமக்கள் கம்பியால் காரை உடைத்து மீட்டனர். அவர் ஆம்புலன்ஸில் பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சத்திரபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை போலீஸார் காரை உடைத்து எடுத்தனர். போலீஸ் விசாரணையில், காரில் வந்த சிஜோவின் குழந்தை இசக்கியேலுக்கு பசி வந்துள்ளது. அதனால், குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக காரை அனுப்பம்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது ஓரத்தில் திருப்பி நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது மதுரையில் இருந்து வேகமாக வந்த லாரி எதிர்பாராதவகையில் கார் மீது மோதியது. லாரி டிரைவர் செல்வராஜ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் சந்தவாசல் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முடித்துவிட்டு, மினி லாரியில் 18 தொழிலாளர்கள், செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினர். மினி லாரியில் சாலை போட பயன்படுத்தப்படும் இயந்திரம் மற்றும் தளவாட பொருட்களும் இருந்தன. மினி லாரியை, சின்னகல்லாந்தல் கிராமத்தைச் சேர்ந்த காவுக்காரன் (31) என்பவர் ஓட்டினார்.
போளூர் - வேலூர் சாலையில் முனியந்தாங்கல் கிராமம் அருகே புணல்குட்டை என்ற இடத்தில், முட்டை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல டிரைவர் காவுக்காரன் முயன்றார். வழி கிடைக்காததால், திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது, இயந்திரம் மற்றும் தளவாடப் பொருட்கள் ஒரே திசைக்கு சென்றதால் பாரம் தாங்காமல் மினி லாரி கவிழ்ந்தது. தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். இயந்திரத்தின் அடியில் சிக்கி பலர் அலறினர். ஆனாந்தல் கிராமம் ஏழுமலை (45), சின்னகல்லாந்தல் கிராமம் தங்கம் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
போளூர் தீயணைப்பு துறை, சந்தவாசல் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பெரிய கல்லாந்தல் கிராமம் திருமலை (32) உயிரிழந்தார். டிரைவர் உள்பட 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் மணி, சந்தவாசல் ஆய்வாளர் சேகர், உதவி ஆய்வாளர் மோகனா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் வாகன விபத்தில் 3 பேர் பலி
வேலூர் நேஷனல் திரையரங்கம் அருகில் டாஸ்மாக் மதுபான கிடங்கு உள்ளது. இங்கிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அரக்கோணத்தில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்ய மினி லாரி ஒன்று புதன்கிழமை காலை புறப்பட்டது.
இந்த லாரி ஆற்காடு அருகே சென்றபோது, சாலை திருப்பத்தில் கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில், மினி லாரியின் முன்புறம் அமர்ந்திருந்த திண்டிவனம் அறிவழகன் (24), வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (20), வேலூர் சேண்பாக்கம் நாதன் (30) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர்.
விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தில் எவ்வளவு மதுபான பாட்டில்கள் சேதமடைந்துள்ளது என்பது குறித்தும் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.