தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு துரைமுருகன் பதில்

தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு துரைமுருகன் பதில்

Published on

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க முடியும் என்று நினைத்தால் அது பகல்கனவாகவே முடியும் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதை தமிழிசை சௌந்தர்ராஜனால் பொறுத்துக் கொள்ள முடியாமல், கதைக்கு உதவாத வாதங்களை முன் வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய சட்டப் போராட்டங்களையும் பெற்ற வெற்றிகளையும் மறந்து விட்டு தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருப்பதாக துரைமுருகன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் விபி சிங், மன்மோகன் சிங் ஆட்சி காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது போல், தற்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஏன் வலியுறுத்தவில்லை என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிக்கை அரசியல் மட்டும் நடத்தி தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்து விட முடியாது என்று தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு துரைமுருகன் தனது அறிக்கை வாயிலாக சுட்டிக் காட்டியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in