

அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மக்களைச் சந்திக்க தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் தன் இல்லத்தின் முன் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் பேசும்போது, “தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி விரைவில் அமையும். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதற்கிடையே ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைவரும் நீங்கள்தான் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று கூறினார்கள்.
யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும், யாருடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதை ஜெயலலிதா எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2012-க்குப் பிறகு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை நான் சசிகலாவிடம் பேசியது இல்லை. ஜெயலலிதா எனக்கிட்ட் உத்தரவுகளை மட்டுமெ கவனித்து வந்தேன் மற்றதன் மீது என் கவனம் துளியும் இல்லை. நான் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாகக் கருதுகிறேன்.
வாக்களித்த மக்களின் எண்ணங்களைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டும். எனக்குப் பின்னணியில் திமுகவும் இல்லை, பாஜகவும் இல்லை. எனக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. கூடிய விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்திப்பேன்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதலமைச்சராக பொறுப்பேற்பேன். பின்வாசல் வழியாக பதவியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
என்று கூறினார் பன்னீர்செல்வம், ஆனால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.