Published : 03 Sep 2016 05:51 PM
Last Updated : 03 Sep 2016 05:51 PM

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்காதது ஏன்?- மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிர் நதிநீர் ஆணையம் அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''9 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. 6 ஆண்டுகள் கடும் போராட்டத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்த பிறகு கடந்த 2013 பிப்ரவரி 19-ம் தேதி இந்தத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்தம் கிடைக்கும் 740 டி.எம்.சி. நீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 1 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இதனை முறையாக வழங்க காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை 90 நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பல ஆண்டுகள் கடந்த பிறகும் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்படவில்லை. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது.

கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக பலரும் யூகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x