Published : 01 Mar 2017 10:48 AM
Last Updated : 01 Mar 2017 10:48 AM

நீலகிரி மாவட்டத்தில் 23 அணைகள் தூர்வார ரூ.260 கோடி ஒதுக்கீடு: குந்தா அணை மார்ச் 4-ம் தேதி திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.

அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் குந்தா மின் நிலையம் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திக்குப் பிறகு வெளியேறும் நீர் குந்தா அணை சுரங்கப் பாதை வழியாக 16 கி.மீ தூரத்தில் உள்ள கெத்தை மின் நிலையம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே முறையில் பரளி, பில்லூர் மின் நிலையங்களும் இயங்குகின்றன.

மின் உற்பத்திக்கு நீர் ஆதாரமான அணைகள் நீண்டகாலமாக தூர்வார நடவடிக்கை எடுக்காததால் பெருமளவு சகதி நிறைந்து, நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. 89 அடி உயரமான குந்தா அணையில் 60 சதவீதத்துக்கு மேல் சகதி உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளன. ஓரிரு நாட்கள் பெய்யும் மழைக்கே அணை நிரம்பி, அணை திறந்து விடப்படுகிறது. கழிவுகளால், கெத்தை மின் நிலைய சுரங்கப் பாதையிலும் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிப்பது வாடிக்கையாக உள்ளது.

பொதுமக்கள் கூறும்போது, குந்தா அணை தூர்வாரி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி நிதியுதவியுடன் அனைத்து அணைகளும் தூர் வாரப்படும் என மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. அணைகளில் தண்ணீர் குறைந்துள்ள இந்த நேரத்தில் அணைகளை தூர்வாருவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 23 அணைகளை தூர்வார ரூ.260 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. குந்தா அணையில் தூர் வாரும் பணிகளுக்காக வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பராமரிப்புப் பணி நடைபெறும் எமரால்டு அணை.

மின் உற்பத்திக்கு சிக்கல்

கடந்த ஆண்டு கோடை காலத்தில் மின் உற்பத்தி ஜரூராக நடந்தது. இதற்காக அணைகள் திறக்கப்பட்டதால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மின் உற்பத்திக்கு முக்கிய அணையான அப்பர் பவானி அணையில் நீர்மட்டம் தற்போது 123 (210) அடியாக குறைந்து விட்டது. இதனால், பருவ மழையை எதிர்பார்த்து மின் வாரியம் காத்திருந்தது. ஆனால், தென்மேற்கு மட்டுமல்லாமல் வட கிழக்குப் பருவ மழையும் பொய்த்துப் போனதால், முக்கிய அணைகளில் நீர் இருப்பு தற்போது 40-50 சதவீதமே உள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், மேலும் தண்ணீர் திறக்காமல், அணைகளில் நீரை தேக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x