ரயில்பாதை அமைக்கும் பணிகளால் 17, 18-ம் தேதிகளில் மூர்மார்க்கெட்டில் இருந்து மின்சார ரயில்கள் இயங்காது: சிறப்பு ரயில்கள், பேருந்துகளை இயக்க நடவடிக்கை

ரயில்பாதை அமைக்கும் பணிகளால் 17, 18-ம் தேதிகளில் மூர்மார்க்கெட்டில் இருந்து மின்சார ரயில்கள் இயங்காது: சிறப்பு ரயில்கள், பேருந்துகளை இயக்க நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் பேசின் பிரிட்ஜ் இடையே 5, 6வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடப்பதால் இன்று முதல் மின்சார ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17, 18-ம் தேதிகளில் மூர்மார்க்கெட்டில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படாது. இதற்குப் பதிலாக கடற்கரையில் இருந்து சிறப்பு ரயில்களும், முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம்சர்மா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை சென்ட்ரல் வந்து செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 6-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் வழியாக வந்து செல்லும் 17 விரைவு ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையம் (மூர்மார்க்கெட் வளாகம்) வந்து செல்லும் மின்சார ரயில்களின் எண்ணிக்கையும் நேரங்களும் நாளை (இன்று) முதல் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் பேசின்பிரிட்ஜ் வரை இயக்கப்படும்.

பேசின்பிரிட்ஜில் இருந்து சென்ட்ரல் உள்ளிட்ட சென்னை நகர பகுதிகளுக்குப் பயணிகள் செல்வதற்கு வசதியாக, சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் 2 பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். பேசின்பிரிட்ஜில் இருந்து சென்னை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் கால அட்டவணைப்படி இயக்கப்படாது. இவை கடற்கரையில் இருந்து சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்.

வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்நிலையம் (மூர்மார்க்கெட்) மூடப்படுவதால், அரக்கோணம் வழியாக வரும் விரைவு ரயில்கள், பெரம்பூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்படும். இதேபோல், கூடூர் வழியாக வரும் விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ஆவடி, திருவள்ளூர், அரக் கோணம், திருத்தணி, கும்மிடி பூண்டி, சூலூர்பேட்டைக்குச் சென்னை கடற்கரையில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க ரயில் நிலையங்களில் தகவல் பலகைகளும், உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in