

பைலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டியும், மத்தியப் பிரதேசம் கோயில் நெரிசல் சம்பவத்தின் அலட்சியத்தை விமர்சித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''பைலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை கேள்விப்பட்டிராத அளவில் ஒடிசா மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் வாழும் சுமார் நான்கரை லட்சம் பேர்களை குழந்தை குட்டிகளுடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு, இடம் பெயரச் செய்தனர். உணவு, குடிதண்ணீர் முதலியவற்றையும் அவர்களுக்கு அளித்தனர். ஆந்திராவிலும், சிறீகாகுளம், விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய பகுதியிலும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இடம் பெயரச் செய்து பாதுகாத்தனர். மொத்தம் ஐந்தரை லட்சம் பேர்களை சில நாள்களில் அவசரமாக இடம் பெறச் செய்துள்ள இது நம் நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய வியக்கத்தக்க சாதனையாகும்.
200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கொடும் புயல் காரணமாக, இதுவரை பல்லாயிரக்கணக்கில் ஏற்பட்டிருக்க வேண்டிய சேதம், வெறும் 23 பேர் உயிர்ப் பலியோடு முடிந்தது. நிவாரணப் பணிகள் முழு வீச்சில் அங்கே இப்போது நடந்து கொண்டுள்ளன. பர்காம்பூர், புவனேகுவர் முதலிய நகரங்களிலும் ஆந்திராவிலும் சகஜ நிலை திரும்பிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் ரத்னாகர் பகுதியில், கோயில் திருவிழாவில் கூடிய 5 லட்சம் பேருக்கு மேல் உள்ள கூட்டத்தினர் மத்தியில் பாலம் விழப் போகிறது, அதற்குமுன் கடந்து விடுங்கள் என்ற ஆதாரமற்ற வதந்தியை, பொய்ச்செய்தியைப் பரப்பியதன் விளைவாக மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிய நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறந்துள்ளனர். சுமார் 250 பேருக்கு மேல் படுகாயப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்துத்துவாவை முன்னிறுத்தும் கட்சியினர் இந்துக்கள் கூடிய திருவிழாவில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதினால் இந்த வேதனையும், துயரமுமான கோர மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடவுள் கருணையே வடிவானவராக இருப்பின் இப்படி மக்களை அதுவும், திருவிழாவிற்கு கும்பிட வந்தவர்களை பலி வாங்குவானா? அதைவிட, சர்வ சக்தி வாய்ந்தவனாக இருப்பின் புயல் போன்ற விபத்துக்கள் போன்றவை ஏற்படாமலேயே தடுத்திருக்க வேண்டாமா?
பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழியை மக்கள் சிந்தித்தால்தான் வளர முடியும். கடவுளை மறந்து, மனித முயற்சிகள் காரணமாக பெரும் புயல் காரணமாக பல லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டனர். பக்தி செய்ய முடியாததை புத்தி செய்து காட்டியுள்ளது. இனியாவது பக்திப் போதையிலிருந்து பக்தர்களே, விடுபடுங்கள். முயற்சியும் உழைப்பும்தான் நம்மை வாழ வைக்கும் என்பதை உணருங்கள்'' என்று வீரமணி கூறியுள்ளார்.