

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
எஸ்பிஓஏ கல்வி அறக்கட்டளை மற்றும் நடுத்தர பெருநிறுவனங்களுக் கான பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான 3 நாள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா எஸ்பிஓஏ பள்ளியில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவில் அரசு முதன்மைச் செயலர் டேவிதார் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள், தான் ஒரு விளையாட்டு வீரர் என்று கூறிக்கொண்டு, படிக்காமல் இருந்து விடக்கூடாது. படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சில பெற்றோர்கள், குழந்தைகள் விளை யாடினால் படிப்பு வராது என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. நன்றாக விளையாடினால், நன்றாக படிக்க முடியும். ஷைனி வில்சன் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதித்துள்ளார். அதே நேரத்தில் அவர் நன்றாக படித்ததால், இன்று இந்திய உணவுக் கழகத்தில் பொதுமேலாளராக உள்ளார். வேலைவாய்ப்பு என்று வரும்போது, கூடுதல் திறன் இருப்போருக்குத்தான் வேலை கிடைக்கும். அதற்கு இதுபோன்ற விளையாட்டுப் போட்டி களில் மாணவர்கள் பங்கேற்பது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்பிஓஏ கல்வி அறக்கட்டளை செயலர் டி.தாமஸ் பிராங்கோ பேசும்போது “எஸ்பிஓஏ பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் ஜெர்மனி கால்பந்து அணியில் இடம்பெற்றிருப்பதாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வந்துள்ளது. அதை படிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவிளான போட்டிகளில் சாதித்து வருகிறார்கள்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் நடுத்தர பெருநிறுவனங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் நிவாசராவ், எஸ்பிஓஏ கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஏ.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சென்னையில் உள்ள 72 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 800 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.