Published : 02 Oct 2013 08:22 PM
Last Updated : 02 Oct 2013 08:22 PM

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் இரண்டு உலைகள் செயல்படத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இருப்பினும் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி சென்னை, காஞ்சி புரம், கடலூர், நெல்லை, கன்னியா குமரி, ராமநாதபுரம் உள்பட தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூடங்குளம் பிரச்சினை

நெல்லை மாவட்டம் கூடங்குளத் தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி போராடி வருகின்றனர். 'அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு' சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் இரண்டு உலைகள் செயல்படத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படவில்லை.

தொடர் முழக்க போராட்டம்

இந்நிலையில், கூடங்குளத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திரும்பப் பெறக் கோரியும், புதனன்று மாவட்டத் தலை நகரங்க ளில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:

அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பேர் மீது 340 வகையான வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல வழக்குகள் பொய் வழக்குகள். இவை அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி விடுதலை இராசேந்திரன், 'மே 17' இயக்க நிர்வாகி திருமுருகன், சேவ் தமிழ்ஸ் அமைப்பு நிர்வாகி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்:

கல்பாக்கத்தில் புதிய அணு உலை நிறுவுவதை எதிர்த்தும், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகவும் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமுமுக பொதுச்செயலர் அப்துல் சமத் தலைமை தாங்கினார்.

திருநெல்வேலி:

பாளையங் கோட்டை பஸ் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமை வகித்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதற்கு, குமரி மாவட்ட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலைமை தாங்கினார்.

திருப்பூர்:

திருப்பூரில் குமரன் சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்த முகில் இராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அரசு பேருந்து பணிமனை அருகில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.

ஈரோடு:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு தலைமை அஞ்சலகம் அருகே ஆர்பாட்டம் நடந்தது. இதை ம.தி.மு.க. எம்.பி., கணேசமுர்த்தி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், பக்கத்து மாவட்டமான தூத்துக்குடியில், போராட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x