

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் வழிபாடு செய்தார். பின்னர் அவர், அண்ணா மலையார் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
அவரை, இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ், மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்டச் செயலாளர் குணசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர். பின்னர் தரிசனத்தை முடித்துக் கொண்டு அமித்ஷா சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரமணர் ஆசிரமத்தில் இருந்து அண்ணாமலையார் கோயில் வரை இரு சக்கர வாகன பேரணிக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த னர். எனினும், பாதுகாப்பு காரணங் களை மேற்கோள்காட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, பேரணிக்கு அனுமதி மறுத்தார். இதனால், அவருக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இரு சக்கர வாகன பேரணி புறப்பட்டுச் சென்றது.
அமித்ஷா வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது கிரிவலப் பாதையில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. அதேபோல், அண்ணா மலையார் கோயிலிலும் 3 மணி நேரத்துக்கு பக்தர்கள் சுவாமி தரி சனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, “குடியரசுத் தலைவர் தேர் தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரை ஆதரிக் காமல், அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்” என்றார்.
டெல்லி புறப்பட்டார்
திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த அமித்ஷா பகல் 12 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்த தலை வர் இல.கணேசன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.