

தலைநகர் டெல்லியில் பலத்தைக் காட்டி, காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற தேசியக் கட்சிகளை தன் பக்கம் ஈர்ப்பதில் தேமுதிக தீவிரம் காட்டி வருகிறது. அதனால்தான் ஏற்காடு இடைத்தேர்தலைக் காட்டிலும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் பெரிதும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது தொடரும் அவதூறு வழக்குகள், எம்எல்ஏக்கள் மீது போடப்படும் நிலமோசடி உள்ளிட்ட வழக்குகள், சில எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் ஈர்த்தது போன்ற காரணங்களால் அதிமுக மீது தேமுதிகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதே நேரத்தில் தங்கள் மீதான நடவடிக்கைகளை திமுக தலைமை வெளிப்படையாக கண்டிக்காததால் அக்கட்சி மீதும் தேமுதிக தலைமை வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்தில் தங்கள் தலைமையில் புதிய அணியை உருவாக்க தேமுதிக கருதுகிறது. அதற்காக தங்கள் பலத்தைக் காட்டி பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க தேமுதிக தலைமை முடிவெடுத்துள்ளது.
தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்றாலே அதிமுக அல்லது திமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன்தான் சேருவது என்ற நிலையை எடுக்கின்றன. இதை மாற்றி தேமுதிகவும் தனிப்பெரும் கட்சிதான் என்பதை உணர வைக்க கட்சித்தலைமை திட்டமிட்டுள்ளதாக தேமுதிகவினர் கூறுகின்றனர்.
காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுமே மாநிலத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையை கேட்டே நடக்க வேண்டியுள்ளது. அதனால்தான், தலைநகரில் உள்ள தேசியத் தலைவர்களுக்கு தங்களது பலத்தை காட்டுவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவை களமிறக்க விஜயகாந்த் முடிவு செய்ததாக தெரிகிறது.
அதனால்தான், ஏற்காடு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பதில் அவசரம் காட்டாமல், டெல்லி தேர்தல் பணிகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டுவதாக கட்சியினர் கூறுகின்றனர். “தலைவரின் கவனம் முழுவதும், டெல்லி தேர்தலில்தான் உள்ளது. அதனால்தான் அங்கு ஏற்கனவே 11 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மேல்-சபை தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு என்பதுபோல் ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டு, கடைசி நேரத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அவர்களுக்கு எங்கள் பலத்தை நேரடியாகவே நிரூபித்துக் காட்டத்தான் டெல்லி தேர்தலில் களமிறங்கி இருக்கிறோம்” என்கிறார் கட்சியின் நிர்வாகி ஒருவர்.
தமிழகத்தைப் பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேமுதிக, மதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதற்கான காய்நகர்த்தலிலும் தேமுதிக இறங்கியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.