

லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபகாலமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. வாட் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மார்ச் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.