Published : 05 Apr 2014 11:25 AM
Last Updated : 05 Apr 2014 11:25 AM

செலவுக் கணக்கு உச்சவரம்பை மீறினால் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் செல்லாது: தமிழகத் தேர்தல் தலைவர் பிரவீண்குமார் பேட்டி

தேர்தலில் வேட்பாளரின் செலவுக் கணக்கு, உச்சவரம்பை மீறினால் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் அல்லது நட்சத்திர பேச்சாளர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரத்திலோ, பொதுக்கூட்ட மேடையிலோ, அந்தத் தொகுதியின் வேட்பாளர் இருந்தாலோ அல்லது அவரது பெயர் அறிவிக்கப்பட்டாலோ, கூட்டத்துக்கான மொத்த செலவுத் தொகையும் குறிப்பிட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், இது புதிய விதி அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளில் நீண்டகாலமாக நடை முறையில் இருந்து வருவதுதான் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளரின் செலவு உச்சவரம்பு ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவுகளை, மத்திய பார்வையாளர்கள் நிழல் போல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்தந்த மாவட்டத்தின் விலைவாசிக்கு ஏற்ப ஒரு உத்தேச விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பார்வையாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேட் பாளர்களின் செலவுகள் குறித்து ஒரு மாதிரி கணக்கைப் பார்வையாளர்கள் பராமரித்து வருவார்கள்.

தேர்தல் முடிந்தபிறகு, வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்போது செலவைக் குறைத்துக் கூறினால், பார்வையாளர் தயாரித்துள்ள மாதிரி செலவுக்கணக்குப் பட்டியலோடு அது ஒப்பிட்டுப் பார்க்கப் படும். அதில், குளறுபடி இருப்பது தெரிந்தால், அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றி பெற்ற வேட்பாளரின் செலவுக் கணக்கு, உச்சவரம்பை மீறியிருந்தால் அவரது பதவி பறிபோகும்.

உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற ஒருவரின் பதவி இதுபோல் பறிபோனது குறிப்பிடத்தக்கது. அவர், ஒரு பத்திரிகையில் பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்தது உறுதியானது. இதனால், அவரது செலவுக்கணக்கு திடீரென அதிகரித்து, உச்சவரம்பை தாண்டியது. இதையடுத்து, அவரது பதவி பறிபோகும் நிலை உருவானது.

ஜெயலலிதா ஹெலிகாப்டர்

முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை சோதனை போடவில்லை என்று சில தரப்பினர் கூறினர். அது பற்றி விசாரித்தபோது, அதில் உண்மையில்லை என தெரிந்தது. முதல்வர் சென்ற ஹெலிகாப்டரும் சோதனை செய்யப் பட்டிருக்கிறது.

மே 15 வரை தபால் ஓட்டு தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருக்கும் போலீஸாரைப் பொருத்தவரை, அவர்கள் தபால் ஓட்டுக்களை தேர்தல் முடிந்த பிறகும் செலுத்தலாம். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினமான மே 15-ம் தேதிக்குள் அவர்கள் தங்கள் வாக்கை செலுத்திவிட வேண்டும். தபால் வாக்குக்கான மனுக்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டிருக்கும் போலீஸார், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x