Published : 25 Jul 2016 12:30 PM
Last Updated : 25 Jul 2016 12:30 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட நிதி திரட்ட 5 ஆயிரம் பேர் பங்கேற்ற தொடர் ஓட்டம்: 10 கி.மீ. ஓடி அசத்திய 78 வயது பெண்மணி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற் காக, டிரீம் ரன்னர்ஸ் அமைப்பு சார் பில் நடத்தப்பட்ட தொடர் ஓட்டத்தில் 78 வயது பெண்மணி உட்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த டிரீம் ரன்னர்ஸ் மற்றும் காவிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, இன்றைய தலைமுறையினரிடம் ஓட்டத்தின் மூலம் உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும், மாற்றுத் திறனாளி களுக்கான செயற்கை கால்கள் வழங்குவதற்கான நிதி திரட்டவும், தொடர் ஓட்டப் போட்டியை பெசன்ட்நகரில் நேற்று நடத்தின. 21 கி.மீ., 10 கி.மீ., மாற்றுத் திறனாளிகளுக்கான 50 மீட்டர் ஓட்டம் என 3 பிரிவாக நடைபெற்றது.

21 கி.மீ. தொடர் ஓட்டப் போட்டி அதிகாலை 4.30 மணிக்கு பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் தொடங்கியது. மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் டிஜிபியுமான ஆர்.நடராஜ், தொடர் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் பங்கேற்றவர்கள், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை வரை ஓடி, திரும்பவும் ஆல்காட் பள்ளியை வந்தடைந்தனர். இதில் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். இது அவர் பங்கேற்ற 32-வது தொடர் ஓட்டமாகும்.

10 கி.மீ. தொடர் ஓட்டம் அதி காலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்றவர்கள், ஆல்காட் பள்ளியில் இருந்து புறப்பட்டு, சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் எம்ஆர்சி நகர் வழியாகச் சென்று, மீண்டும் ஆல்காட் பள்ளியை வந்தடைந்தனர். மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 50 மீட்டர் போட்டி ஆல்காட் பள்ளி திடலிலேயே நடைபெற்றது. அனைத்து பிரிவுகளிலும் 72 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த தொடர் ஓட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட ரூ.4 லட்சம் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்களை வழங்கி வரும் ஃபிரீடம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. தொடர் ஓட்டத்தில் சிறப்பிடம் பிடித்த 24 பேருக்கு, சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் பவானீஸ்வரி உள்ளிட்டோர் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

சுந்தரி சித்தார்த்தா

தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற வர்களில் சென்னை அடையாறைச் சேர்ந்த சுந்தரி சித்தார்த்தா (78) அதிக வயதானவர். இவர் 10 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றார். இந்த வயதிலும் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் சமஸ்கிருத பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். 2006-ல் சென்னை வந்துவிட்டேன். அப்போது முதியோருக்கான தொடர் ஓட்டப்போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அது தொடர்பான செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியானது. அதைப் பார்த்ததும் ஏற்பட்ட உந்துதல் காரணமாக தொடர்ந்து பல்வேறு தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். சுந்தரி சித்தார்த்தா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x