சென்னையில் போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி: பொதுமக்கள் மறியல் - போலீஸ் தடியடி

சென்னையில் போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி: பொதுமக்கள் மறியல் - போலீஸ் தடியடி
Updated on
1 min read

சென்னை அயனாவரம் பகுதியில் போலீஸ் வேன் மோதி இரண்டு மாணவர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர்.

சென்னை அயனாவரம் ஏஹாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (16). 10-ம் வகுப்பு முடித்து விட்டு பிளஸ் 1 வகுப்பு செல்கிறார். அயானாவரம் மாந்தோப்பு ரயில்வே காலனி மைதானத்தில் விளையாடுவதற்காக ராம்குமாரும், அவரது நண்பர் சாலமன் (16) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராம்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

புரசைவாக்கம் ஆண்டர்சன் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த போலீஸ் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த ராம்குமார் மீது போலீஸ் வேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பலியானார். படுகாயமடைந்த சாலமன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலமனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சாலமன் இறந்தார். ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து நடந்ததும் போலீஸ் வேனை ஓட்டி வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் ஏழுமலையும், அவருடன் இருந்த 6 போலீஸாரும் வேனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். விசாரணையில் போலீஸ் வேன் ஆயுதப்படை காவலர்களுக்கான உணவு பொட்டலங்களை ஏற்றிச் சென்றது தெரிந்தது.

பொதுமக்கள் சாலை மறியல்:

இந்நிலையில் விபத்து குறித்து அறிந்த ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆண்டர்சான் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். போலீஸார் அவர்களிடம் சமாதானப்பேச்சு நடத்தியும் கலைந்து செல்லாமல் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வேனை கல் மற்றும் கட்டைகளால் தாக்கினர். லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் கற்களை சாலைகளில் போட்டு மறியல் செய்தனர்.

போலீஸார் தடியடி:

ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக மறியல் நீடித்ததால் ஆண்டர்சன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, கிள்ளியூர் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். சிதறி ஓடியவர்களை போலீஸார் விரட்டி விரட்டி தாக்கினர்.

போலீஸ் தடியடியில் 5 பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதன் பின்னரே போக்குவரத்து சரியானது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் ஏழுமலை ஓட்டேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in