காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மீதான தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக் கோரி போராட்டம்

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மீதான தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக் கோரி போராட்டம்
Updated on
2 min read

மாநிலம் முழுவதும் பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மீதான தமிழகத்தின் உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தமிழகம் முழுவதும் நேற்று நடத்திய கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் பங்கேற்ற சுமார் 5 ஆயிரம் பேர் கைதாகி விடுதலையானார்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரைத் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. இந்நிலையில், காவிரியின் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளம் மற்றும் ஆந்திரத்தின் செயல்களை முறியடிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறை வேற்ற வலியுறுத்தி தமிழகம் முழு வதும் கடையடைப்பு மற்றும் சாலை, ரயில் மறியல் போராட்டங் களுக்கு தமிழக அனைத்து விவ சாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு அதிமுக, இடதுசாரிகள் தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்தன.

திட்டமிட்டபடி கடையடைப்பு மற்றும் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பரவலாக நடத்தப் பட்டன. இந்தப் போராட்டங்களில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர், திமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, பாமக, தேமுதிக, மமக, எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, விக்கிரமராஜா மற்றும் வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்கள் பங்கேற்றன.

தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலை வர் பி.ஆர்.பாண்டியன் தலைமையி லான ரயில் மறியல் போராட்டத் துக்கு சென்னை வாழ் காவிரி மைந்தர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளருமான சிவராஜசேகரன் ஏற்பாடு செய்திருந்தார்.

எழும்பூரில் நடந்த போராட் டத்தில் திமுக சார்பில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஊடக பொறுப்பாளர் கோபண்ணா, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், தமாகா விவசாயிகள் பிரிவுத் தலைவர் புலியூர் நாகாராஜன், ஆம் ஆத்மி சார்பில் சுதா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி தலைவர் சேதுராமன், சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் உட்பட அந்தந்த கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

எழும்பூரில் ரயிலில் மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் அதிகமானவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் செய்தனர். சென்னை தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை சென்ட்ரலில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாவரத்திலும் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில், இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,000 பேர் கைதாகி நேற்று மாலை விடுதலையானார்கள்.

இந்த போராட்டங்கள் குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், முல்லைப்பெரியாறு, பாலாறு மீதான தமிழகத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, தேமுதிக, பாமக, மமக, அஇமூமுக, உலகத் தமிழர் பேரமைப்பு ஆகிய அமைப்புகள் எங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டன.

தமிழகத்தில் மொத்தம் 100 இடங்களில் ரயில் மறியலும், 1000 இடங்களில் சாலை மறியலும் நடத்தப்பட்டன. வணிகர் சங்கங் களின் பிரதிநிதிகள் தாமாக முன் வந்து கடையடைப்பு போராட் டத்தில் பங்கேற்றது நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தப் போராட் டத்தில் ஈடுபட்டதற்காக ஆயிரக் கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டி முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்ல சித்தராமையாவுக்கு எந்த உரிமையும் இல்லை. இதனை பிரதமர் வேடிக்கை பார்க்கக் கூடாது.

காவிரி பிரச்சினை உட்பட தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரிடம் எடுத்துக் கூற வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் பிரதமரை சந்தித்து தங்களது நிலையை எடுத்துக் கூற அவர் உதவ வேண்டும்’ என்றார்.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in