தமிழகத்தில் கடந்த ஆண்டு 84 யானைகள் உயிரிழப்பு: பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் தேவை

தமிழகத்தில் கடந்த ஆண்டு 84 யானைகள் உயிரிழப்பு: பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் தேவை
Updated on
2 min read

ஆசிய யானைகளைப் பொறுத்தவரை இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்களில்தான் யானைகள் அதிகம்.

பேருயிர் என்று அழைக்கப்படும் யானைகள் பல்வேறு காரணங்களால் இறப்பது அதிகரித்து வருகிறது. யானைகளால் மக்கள் பலியாவதும் தொடர்கிறது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 84 யானைகள் இறந்துள்ளன. அதேபோல, கடந்த ஏப்ரல் முதல் இதுவரை யானைகள் தாக்கியதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஓசை அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு மேற்கு மலைத்தொடர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான க.காளிதாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

உலகில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது நீலகிரி உயிர்க்கோள காப்பகம். தமிழகத்தில் நீலகிரி, கோவை, சத்தியமங்கலம், கேரளாவில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு, மன்னார்காடு, கர்நாடகாவின் பந்திப்பூர், கொள்ளேகல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மையமாகத் திகழ்கிறது நீலகிரி உயிர்க்கோள காப்பகம். தீவனம், குடிநீர் நிறைந்து காணப்பட்ட இப்பகுதிகளில் உலவும் யானைகள் தினமும் சுமார் 16 மணி நேரம் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவை.

க.காளிதாசன்

வனத்தில் வாழும் பழங்குடி மக்கள் யானைகளை இடையூறாக கருதுவதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பழங்குடி மக்களே யானைகளைப் பார்த்து அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மக்கள்தான்.

பாரம்பரியமாய் உள்ள யானைகளின் வாழ்விடம் மற்றும் வலசைப் பாதைகளை ஆக்கிரமித்தும், அபகரித்தும், இடையூறு செய்தும், யானைகளின் பாதையை திசை திருப்புகிறோம். வேறு வழியின்றி தீவனத்துக்காகவும், தண்ணீர் தேடியும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் நுழைகின்றன. அவற்றை விரட்டும்போது, மனித- விலங்கு மோதல் உருவாகிறது.

யானைகள் கடக்கும் பாதையில் வாகனப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். மலைப் பகுதிகளில் பெரும் கட்டிடங்கள் கட்டுவதைத் தடுத்து நிறுத்த, மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.

யானைகளின் வலசைப் பாதையை மறித்து கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். வனப் பகுதிகளில் அவற்றுக்கு போதுமான தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். யானைகளின் 60 சதவீத தீவனமான புற்களை அழிக்கும் உன்னிச்செடி, சீமைக்கருவேல மரங்களை அகற்ற நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை விரட்ட பட்டாசு வெடிக்கும் முறையைக் கைவிட்டு, தீப்பந்தம், மேளம் கொட்டுதல் போன்ற பாரம்பரிய முறைகளைக் கையாள வேண்டும்.

சட்டவிரோத மின் வேலிகளால் ஆண் யானைகள் அதிக அளவில் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யானைகளில், சுமார் 1,000 முதல் 1,500 மட்டுமே ஆண் யானைகளாக உள்ளன. எனவே, இவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே, குறைந்த செலவிலான, நவீன தொங்கும் மின் வலை அமைக்க வேண்டும்.

வனப் பகுதிகளிலும், யானைகளின் வலசைப் பாதைகளிலும் செல்லும் சாலை, ரயில் பாதைகளை உயர்நிலைப் பாதை மற்றும் பாலங்களாக மாற்றலாம். வன எல்லையோரப் பகுதிகளில் யானைகளால் பாதிக்கப்படாத பயிர்களை சாகுபடி செய்வது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்த வேண்டும். மேலும், ஊருக்குள் நுழைந்த யானைகளை விரட்ட, உரிய உபகரணங்கள், பயிற்சி பெற்ற தனிப் படையை உருவாக்க வேண்டும். விலங்குகளைக் கொல்வோரைத் தடுக்கவும், வனத் துறையில் போதுமான அளவுக்கு கால்நடை மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானைகள் உயிரிழப்பைத் தடுக்கவும், அவற்றிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் அனைத்துத் துறைகள், பொதுமக்களை இணைத்து ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in