மருத்துவம் படிக்க உதவுங்கள்: தொழிலாளியின் மகள் ஆட்சியரிடம் மனு

மருத்துவம் படிக்க உதவுங்கள்: தொழிலாளியின் மகள் ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

மருத்துவ கலந்தாய்வு மூலமாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், குடும்ப சூழல் காரணமாக கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள ஈரோடு மாணவி, உதவி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயத் தொழிலாளி. இவரது மகள் எஸ்.தீபா. பிளஸ் 2 தேர்வில் 1153 மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளிகள் அளவில், ஈரோடு மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.

மருத்துவம் படிக்க விரும்பிய தீபா அதற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். தீபாவின் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 192.25. அவருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால், தனது குடும்ப சூழல் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் தீபா உள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்த தீபா ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்தார். அதில், ‘பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால், மருத்துவக் கலந்தாய்வில் எனக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவ கல்வி பயில முதலாமாண்டு கல்வி கட்டணமாக ரூ.20 ஆயிரமும், விடுதி உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.6 ஆயிரமும் கட்ட வேண்டியுள்ளது. எனது தந்தை விவசாய கூலி தொழிலாளியாக உள்ளதால், இந்த தொகையை செலுத்த முடியாத நிலையில், எனது படிப்பை தொடர் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மருத்துவ கல்வி தொடர ஆட்சியர் உதவி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மருத்துவம் பயில விரும்பும் எஸ்.தீபாவிற்கு உதவ விரும்புபவர்கள் 83440 30807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in