

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒட்டு மொத்த தமிழர்களோடு சேர்ந்து தமிழ்த்திரைத்துறையினரும் உறுதுணையாக இருப்பார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலா ளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: இந்த மண்ணை, மொழியை, இனத்தை நேசித்து கதை சொல்லிக்கொடுத்த மக்களின் ஈரத்தை வாங்கி வளர்ந்தவன், நான். இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் போராடுவது நியாயமான விஷயம். இங்கே ஆபத்து ஏற்படும் காலங்களில் யார் யார் காவல் காக்க வருகிறார்களோ அவர்களோடு எல்லோருமே துணை நிற்பார்கள்.
உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்குத் தண்டனையை ரத்து செய்துகொண்டிருக்கும் கால கட்டம் இது. இப்படியான சூழலில் நீதிபதி சதாசிவம் சரியான தீர்ப்பை அளித்தார். மாநில அரசோ தாய்மை உணர்வோடு அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்கள். அதற்காக உலக தமிழர்கள் அத்தனை பேரும் கண்ணீரால் முதல்வருக்கு நன்றி சொல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவரும், இயக்குநருமான அமீர் பேசுகையில், “தமிழனின் இத்தனை ஆண்டுகால போராட் டங்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தமிழன் அமர்ந்ததால் விடிவு கிடைத்திருக்கிறது. விடுதலை முடிவு அவசரகாலத்தில் எடுத்த முடிவு என்று சிலர் சொல்வது, அரசி யல் ஆதாயத்திற்காக கூறப்படும் கருத்து. புத்திசாலித்தனத்தோடும், தொலைநோக்குப்பார்வையோடும் எடுத்த முடிவு இது. முதல்வரின் பின்னால் ஒட்டுமொத்த திரையுலக மும் நிற்கும்!’’ என்றார்.
பாடலாசிரியர் தாமரை பேசுகையில், “குற்றவாளிகளை தண்டியுங்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டியுங்கள் என்றே சொல்கி றோம்’’ என்றார்.