

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பாது காப்புப் பணிக்காக துணை ராணுவத்தினரை அதிக அளவில் குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் நடவடிக்கைகளை கண் காணிக்க பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர் களை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது இதற்கிடையே, ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக, தேர்தல் ஆணையத்திடம் திமுக மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினர் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பணப் புழக் கத்தை கண்காணிக்க கூடுதலாக 2 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் நியமித்தது. மேலும், களத் தில் உள்ள 62 வேட்பாளர்களும் தங்கள் செலவுக் கணக்கை ஆணை யத்திடம் 2 நாட்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.
இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் இயக்குநர்கள் திலீப் சர்மா (செலவினம்), திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்தி கேயன், மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், தேர்தல் பார்வை யாளர்கள் பிரவீன் பிரகாஷ் (பொது), ஷிவ்குமார் வர்மா (காவல்), அபர்ணா வில்லூரி (செலவினம்), சமீர் டோக்கிரிவால் (செலவின சிறப்பு), மல்லிகார்ஜூன் உத்துரே (செலவின சிறப்பு), தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயர், மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா, கூடுதல் ஆணையர் சாரங்கன், வருமான வரித்துறை (புலனாய்வு பிரிவு) இயக்குநர் முரளி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள், சோதனைச் சாவடிகள், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு வரும் புகார்கள், அரசியல் கட்சிகளின் புகார்கள், விதி மீறல்கள் மீதான நடவடிக்கைகள், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துதல், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
வழக்கமாக, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டுமே துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர். ஆனால் திமுகவும், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியும், முறைகேடுகளை காரணம் காட்டி துணை ராணுவப்படையை அதிக அளவில் பயன்படுத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. இது தொடர் பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. கட்சிகளின் கோரிக்கை, தற்போதுள்ள சூழல் கருதி, ஆர்.கே.நகரில் துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல் கட்சியினர் சந்திப்பு
இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதி களை தேர்தல் பார்வையாளர்கள் சந்தித்தனர். இதில் பகுஜன் சமாஜ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திமுக, அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா), தேமுதிக ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக் கைகளை விடுத்தனர்.
சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
இரா.கிரிராஜன் (திமுக):
ஆர்.கே.நகர் தொகுதியில் பணி யாற்றும் காவல், வருவாய் துறை யினரை இடமாற்றம் செய்ய வேண்டும். வீடுகளில் பணம் கொடுத்துள்ளதற்கு குறியீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான புகைப்படங்களுடன் மனு அளித் துள்ளோம். மத்திய படையி னரை பாதுகாப்புக்கு அனுப்புவ தாக அதிகாரிகள் உறுதி அளித் துள்ளனர். இறந்த, முகவரி மாறிய 16 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் மீண்டும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
குமரகுரு (பாஜக):
திமுக மற்றும் அதிமுகவின் இரு அணிகளின் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்துள்ளோம். எங்கள் கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரும்போது பாதுகாப்பு கோரியுள்ளோம். வாக்குச்சாவடியின் உள்ளேயும் வெளியிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்றோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்):
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அம்மா மற்றும் திமுகவினர் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து வந்துள்ளனர். அவர் களின் வாகனங்கள், சாலைகளில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளரான டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோயில், அரசு பள்ளி வளா கத்தை தேர்தலுக்காக பயன்படுத்து கின்றனர். அதை தடை செய்ய வேண்டும். பணம் வழங்குவதற் காக டோக்கன் கொடுத்து வருகின் றனர். இதை தடுத்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.