

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
டெல்லியில் வரும் 7-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழுவை சந்தித்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்த உள் ளோம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளனர். இனிமேல் வரும் தேர்தலாவது நியாயமானதாக நடக்க வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க, நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்திக்க உள்ளேன். பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால் தேர்தலுக்கு முன்பும் பின்பும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும், கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும், கட்சியின் சின்னத்தை முடக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டும்.
திமுக ரூ.6 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றது. அதிமுக 10 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும். மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் என்பதால், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்காது. ஏதோ நம்பிக்கையில் போட்டியிடுகிறோம்.
முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுபிரசாத் நீக்கம் அவர்களின் உட்கட்சி பிரச்சினை. கிருஷ்ணசாமி மற்றும் விஷ்ணுபிரசாத் 40 ஆண்டுகால காங்கிரஸ் பாரம்பரிய குடும்பம். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது திமுக தான். தேவையில்லாமல் எங்கள் பெயரை பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.