திருவள்ளூரில் 16,327 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது

திருவள்ளூரில் 16,327 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் 16, 327 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்து, அதிகமுறை ரத்த தானம் செய்தவர்களுக்கும் முகாம் அமைப்பாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவில், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் மோகனன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரான மருத்துவர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: குருதி கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் ரத்தம் ஒரு உயிரை மட்டுமல்லாமல், மகப்பேற்றின் போது தாயையும் குழந்தையையும் பாதுகாக்கிறது. விபத்தின் போது, ஒரே நேரத்தில் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது.

தன்னார்வமுடன் ரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட 30 முகாம்கள் மூலம் 2,270 யூனிட் ரத்தமும், ரத்த வங்கி மூலம் 15,318 யூனிட் ரத்தமும் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

அதேபோல், நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட 44 முகாம்கள் மூலம் 3,097 யூனிட் ரத்தம், ரத்த வங்கி மூலம் 13,230 யூனிட் ரத்தம் என, 16,327 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 39 அரசு அலுவலர்கள் தாமாகவே முன் வந்து ரத்ததானம் அளிக்க பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in