

''தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டது வெறும் கண்துடைப்பு''என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் தாமிரபரணி ஆற்றுநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் பாசனத்துக்கும், குடிநீருக்கும் முறையாக பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கு, திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 10 முதல் 13 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. திருநெல்வேலியில் வீட்டுக் கழிவுகளும், வணிகக் கழிவுகளும் கலந்து ஆறு மாசுபடுகிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் கூவத்தைப்போல் தாமிரபரணியும் மாறிவிடும்.
வெள்ளநீர் கால்வாய்
தொழிற்சாலைகளும் அதிகளவில் ஆற்றுநீரை உறிஞ்சி எடுக்கின்றன. தாமிரபரணி ஆற்று நீரால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் பாசனம் நடைபெறும். இத் திட்டத்துக்கு திமுக ஆட்சியிலும் சரியாக நிதி ஒதுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் திட்ட மதிப்பீடு பெருமளவு அதிகரித்திருக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. தாமிரபரணி ஆற்றிலிருந்து அள்ளப்படும் மணல் கேரளத்துக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றவும், தேவைப்பட்டால் போராட்டங்களை நடத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை
தாமிரபரணியில் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். 276 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை 500 கி.மீ. தூரத்துக்கு அதிகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழகத்தில் இதுபோன்று 20 பாசனத் திட்டங்களை நிறைவேற்ற ரூ. 30 ஆயிரம் கோடி போதும். ஆனால் அதை ஒதுக்கீடு செய்யாமல், இலவசங்களுக்காக ரூ. 62 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை. அதிமுகவும், திமுகவும் சரிவர செயல்படவில்லை. சட்டப்பேரவை மரபுகளை இரு கட்சிகளும் கடைபிடிக்கவில்லை. திமுக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்தால்தான் அங்கு என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியவரும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். படிப்படியாக மதுவிலக்கு என்று அதிமுக அறிவித்தது. தற்போது 500 மதுக்கடைகளை மூடியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எங்கு அதிகம் பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் கடைகளை மூடவில்லை. மதுக்கடைகள் மூடப்பட்டது வெறும் கண்துடைப்பு, என்றார் அவர்.
தமிழ்நாடு உழவர் பேரியக்க ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கருத்தரங்கில் பேசினர்.