

சென்னையில் வெள்ளத்தின் காரணமாக இந்த வருடம், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சற்றே குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாகவே சூழல் இருந்தது. வழக்கம் போல இந்த ஆண்டும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடந்தன. காவல் துறையும், மருத்துவமனைகளும் தொடர்ந்து இயங்கின. எண்ணற்ற சாலை வழக்குகள் பதியப்பட்டன. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டிய விபத்துகள் தொடர்பான தகவல்களும் புள்ளிவிவரம்:
* வழக்கம்போல இந்தப் புத்தாண்டும் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்தது. வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி, தொடர்ச்சியாக சாலைகளில் விரைந்து சென்றன.
* அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்காக புதன்கிழமை காலையில் பணியை ஆரம்பித்த, சுமார் 2500 போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பல சட்ட ஒழுங்கு அதிகாரிகள், புத்தாண்டின் காரணமாக வியாழன் வரையிலும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
* வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பிறகு, ஆம்புலன்ஸ்கள் அனைத்திலும் வயர்லெஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் வழக்கமாகப் பணியில் இருக்கும் 41 ஆம்புலன்ஸோடு, கூடுதலாக 16 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன.
* மாதவரத்தைச் சேர்ந்த காளியப்பன் (22), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரூபன் (20), புளியந்தோப்பைச் சேர்ந்த அரவிந்தன் (23) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது செல்பேசியில் பேசியது, வேகமாகச் சென்றது உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்தில் இறந்திருக்கின்றனர். இவர்களைத் தவிர, சுந்தர்ராஜ் (19), ரத்னகுமார் உள்ளிட்டோரும் புத்தாண்டில் உயிரிழந்தனர்.
* சென்னையில் சுமார் 30 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் வாகனங்கள், புத்தாண்டு அன்று மட்டும் சாலையில் ஓடின.
* விரைந்து சென்ற வாகனங்களின் ஒலி மற்றும் புகையால், அருகில் இருந்த வீடுகளில் குடியிருந்தவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள், வெகுவாக சிரமத்துக்கு உள்ளாகினர்.
* புத்தாண்டை முன்னிட்டு கடைகளும், நிறுவனங்களும், அலுவலகங்களும் வெறிச்சோடிக் கிடக்க, மருத்துவமனைகள் மட்டும் பரபரப்பாக இயங்கின.
* பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், நெருக்கியடித்த சாலைப் போக்குவரத்தால் வேகமாகச் சென்ற அனைவரையும் கண்காணிக்க முடியவில்லை. கண்மூடித்தனமாக வண்டி ஓட்டிச்சென்ற சுமார் 1000 இளைஞர்களை, காவலர்களால் எச்சரித்து அனுப்ப மட்டுமே முடிந்திருக்கிறது.
* மெரினா கடற்கரையில் மட்டும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
* வியாழன் மாலையில் இருந்து, புத்தாண்டு காலை 4 மணி வரை, 156 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 66 பேர் சாலை விபத்தாலும், 13 பேர் அடிதடிகளாலும், 3 பேர் இறந்த நிலையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதிப் பேர் சிறிய காயங்களுக்காக வந்திருக்கின்றனர்.
* ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சட்டத்திற்கு உட்பட்டு 96 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 23 பேர் தாக்குதலாலும், 44 பேர் சாலை விபத்தாலும் அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களைத் தவிர, சுமார் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
* இதைத்தவிர சென்னை முழுக்க சுமார் 150 விபத்துகள் நடந்திருக்கின்றன. சுமார் 110 இரு சக்கர ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
* புத்தாண்டு தொடங்கும் நேரமான 12 மணி வரைக்கும், நிலைமை சீராகவே இருந்திருக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்த நிமிடங்களில் சாலை விபத்துக்கள், அடிதடி உள்ளிட்ட தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
* அரசு மருத்துவமனைகள் அளவுக்கு தனியார் மருத்துவமனைகளில், சாலைகளில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படவில்லை.