

தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் பயனாளிகளின் பெயரில் 42 லட்சத்துக்கும் அதிகமான போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை செல்வபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் நாகநந்தினி. இவரது பெயரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிம்கார்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்ததன் பேரில், போலி சிம்கார்டுகளை கண்டறிய வேண்டுமென இவர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் நாகநந்தினியின் ஆவணங்களை வைத்து 4 போலி சிம்கார்டுகள் தயாரித்து அவை புழக்கத்தில் விடப்பட்டது தெரியவந்தது. இதை உறுதிப்படுத்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை, அவரது பெயரில் பெறப்பட்டுள்ள எண்கள் குறித்த பட்டியலையும் சமீபத்தில் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக கூடுதல் நடவடிக்கை தேவை எனில், உள்ளூர் போலீஸார் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெண், சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான போலி சிம்கார்டுகள் குறித்த தகவல் முழுவதுமே மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருக்கிறது. ஆவணங்களை சமர்ப்பித்தாலும் கூட நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சிம்கார்டுகள் மட்டும் லட்சக்கணக்கில் போலியாக செயல்பட்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அனைத்து வகைக் குற்றங்களுக்கும் போலி சிம்கார்டுகள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே போலிகளை நீக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் பேரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார் 42 லட்சம் சிம்கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 3 வருடமாக ஒரு குறிப்பிட்ட ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் போலியாக வழங்கப்பட்ட சிம்கார்டுகள் குறித்த தகவலை சேகரித்து வருகிறேன்.
கோவையில் பீளமேடு, பிஆர்பி காலனி என்ற பகுதியில் சிலரது ஆவணங்களை வைத்து நான்கே நாட்களில் 580 சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய அரசு அதிகாரிகளது ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை காட்டவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களே போலிகளை ஊக்குவிக்கின்றன.
இது குறித்து தொலைத்தொடர்புத் துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் நாளுக்குநாள் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நிறுவனம் தனது சிம்கார்டுகளை ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கூட ஏலமே இல்லாமல் பெற முடியும். இது தொடர்பாக கோவை மாநகர போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் அளித்துள்ளோம் என்றார்.
குறியீட்டை அடைய…
கோவையைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனைப் பிரதிநிதி கூறும்போது, 'டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடங்களே உள்ளன. ஆயிரம் ஆவணங்களை வாங்கினால், அவற்றோடு போலியான புகைப்படங்களை அச்சிட்டு கொடுத்துவிடுவார்கள். ஓர் ஆவணத்துக்கு ரூ.6 வரை செலவாகும்.
எங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு சிம்கார்டு விற்பனை செய்யவேண்டுமென்ற நெருக்கடி இருப்பதால், அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்தது போல காட்டிவிடுவோம். பின்னர் அதை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு விற்பது, 3 மாதம் வைத்திருந்து, வேறு நெட்வொர்க்கு மாற்றி விற்பது என பல வேலைகளைச் செய்வோம். தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இதை செய்கிறார்கள். வாக்காளர் பட்டியலை மொத்தமாக எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்' என்றார்.