

தமிழகத்தில் நீண்டகாலமாக இழுபறியாக இருந்த மாநில வன உயிரின வாரியத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1972-ம் ஆண்டு இந்திய வன உயிரினச் சட்டம் கடந்த 2002-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் மேம்படுத்த, வனப் பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்ள வன உயிரின வாரியம் அமைக்கப்பட்டு திட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வன உயிரின வாரியங்கள் அமைக்கப்பட்டன.
இந்த வாரியத்தின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால், 2006-ல் தமிழகத்தில் வன உயிரின வாரியம் காலாவதியான பின்பு மீண்டும் வாரியம் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, தமிழக அரசு தற்போது தமிழக வன உயிரின வாரியம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன் தலைவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மாநில வனத்துறை அமைச்சர் ஆனந்தன், உறுப்பினர் செயலாளராக தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் லட்சுமி நாராயண், எம்.எல்.ஏ-க்கள் வேணுகோபால் (பழனி), சின்னராஜ் (மேட்டுப்பாளையம்), கோவி சம்பத்குமார் (வாணியம்பாடி), சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காளிதாசன், பேட்டர்சன் எட்வர்டு மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., வனத்துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரியம் அமைக்கப் பட்டதன் மூலம் வன உயிரின பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் முதல்வரின் நேரடி கவனத்துக்கு உடனடியாக கொண்டு் செல்லப்படும்.