Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

சென்னை பட்ஜெட்: 132 புதிய அறிவிப்புகள் வெளியீடு; கல்விக்கு அதி முக்கியத்துவம்

சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பட்ஜெட்டில் மொத்த வரவு 4 ஆயிரத்து 199 கோடி ரூபாய் எனவும், மொத்த செலவு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் எனவும், பற்றாக்குறை 1.15 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் மேயர் துரைசாமி 132 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அதிகபட்சமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து 23 அறிவிப்புகளை வெளியிட்டார்.

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி, 10, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3 இடங்களை பெறும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஆகிய அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

சென்னையில் 8 சமூக மருத்துவமனைகளை அமைப்பது உள்ளிட்ட பொது சுகாதாரம் தொடர்பான 23 அறிவிப்புகளையும், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட குடும்ப நலம் தொடர்பான 10 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் ஏழை, ஆதரவற்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள், வெளியூரிலிருந்து சென்னை வருவோருக்கு அம்மா மாநகராட்சி

தங்கும் விடுதிகள், கிராமப் புறங்களிலிருந்து வந்து சென்னையில் தங்கி படிக்கும், பணியாற்றும் பெண்களுக்கு அம்மா மகளிர் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் மக்கும் குப்பையிலிருந்து எரிவாயு தயாரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி, கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோயில் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலையில் உள்ள இரு ரயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகளை மேயர் வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் மழைநீர் வடிகால்வாய்களில் கலக்கும் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்புகள், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மயானங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் என மாநகர வாசிகளுக்கு தேவையான அறிவிப்புகள் பெருமளவில் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

முக்கிய அறிவிப்புகள்

# 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை, ஆதரவற்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள்.

# குறைந்த விலையில் 20 லிட்டர் ‘அம்மா குடிநீர்’.

# வெளியூரிலிருந்து சென்னை வருவோருக்கு அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்.

# கிராமப் புறங்களிலிருந்து வந்து தங்கி படிக்கும், பணியாற்றும் பெண்களுக்கு அம்மா மகளிர் தங்கும் விடுதிகள்.

# சென்னையில் 200 வார்டுகளிலும் அம்மா வாரச்சந்தை.

# சென்னையில் பல்வேறு இடங்களில் அம்மா திரையரங்கம்.

# சென்னை பள்ளிகளில் படிக்கும், படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு அம்மா கட்டணமில்லா கணினிப் பயிற்சி.

# இந்தியாவை சாராதவரின் பெயர்களைக் கொண்ட சாலைகளுக்கு பெயர் மாற்றம்.

# மாநகராட்சியின் நடவடிக்கைகளை பொது மக்கள் அறிந்துகொள்ள மாதந்தோறும் ‘மாநகராட்சி செய்தி மலர்’ வெளியிடல்.

# அனைத்து பாதசாரிகள் நடைபாதைகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் தேவையான ஒளி விளக்குகள்.

# சுற்றித் திரியும் மாடுகளின் தொல்லையைப் போக்கிட இரண்டு மாட்டுத் தொழுவங்கள்.

# சென்னையில் 6 நவீன உள்விளையாட்டு அரங்குகள்.

# கர்ப்பகாலச் சர்க்கரை நோய் கண்டறிதல்.

# மார்பக புற்றுநோய் கண்டறிய 5 சோனோ மேமோகிராம் கருவிகள்.

# ரிப்பன் மாளிகையில், மண்டல அலுவலகங்களில் பொது மக்களுக்கான நகரும் கழிப்பறைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x